13.8 C
Scarborough

யாழில் மின்கலங்களை திருடிய கடற்படை முன்னாள் சிப்பாய் உள்ளிட்ட ஐவருக்கு விளக்கமறியல்!

Must read

யாழ்ப்பாணத்தில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களின் மின் கலங்களை தொடர்ச்சியாக திருடி வந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கடற்படையின் முன்னாள் சிப்பாய் உள்ளிட்ட ஐந்து பேரையும் எதிர்வரும் 04ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கைத்தொலைபேசி தொலைத்தொடர்பு வலையமைப்புக்களின் தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு பொருத்தப்பட்டிருந்த மின் கலங்கள் தொடர்ச்சியாக களவாடப்பட்டு வந்துள்ளன.

இது தொடர்பில், கோபுரங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்குரிய பொலிஸ் நிலையங்களில், குறித்த நிறுவனங்கள் முறைப்பாடுகளை பதிவு செய்திருந்தன.

முறைப்பாடுகளின் பிரகாரம் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நளின் தர்ஷன தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் , மின்கலன்களை களவெடுத்தவர்கள் அம்பாறை பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற விசேட பொலிஸ் குழுவினர் சந்தேக நபர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை அம்பாறையில் இருந்து கோப்பாய் பொலிஸ் நிலையம் கொண்டு வந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த வேளை கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கடற்படை முன்னாள் சிப்பாய் எனவும் , மற்றுமொருவர் களவாடப்பட்ட மின் கலங்களை கொள்வனவு செய்தவர் எனவும் ஏனைய மூவரும் களவுக்கு உடந்தையாக செயற்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் மாத்திரம் 192 மின் கலங்களை களவாடியுள்ளனர் எனவும்,மின்கலம் ஒன்றின் பெறுமதி சுமார் ஒரு இலட்ச ரூபாய்க்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்தனர்.

கோப்பாய் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில், ஐவரையும் எதிர்வரும் 04ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.

அதேவேளை களவாடப்பட்ட மின் கலங்களை பொலிஸார் மீட்டுள்ளதுடன் , அவற்றை நீதிமன்றில் சான்று பொருட்களாக பாரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article