கனடா கிரிக்கெட்டின் தற்போதைய நிறைவேற்று அதிகாரி ஷல்மான் கான், செயிட் வஜாத் அலி என்பவருடன் சேர்ந்து கால்கரி மற்றும் மாவட்ட கிரிக்கெட் லீக்கின் பொறுப்பதிகாரியாக இருந்த காலத்தில் அதிகமான திருட்டு மற்றும் $5,000 க்கும் அதிகமான மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக பொருத்தமான நடவடிக்கையைத் மேற்கொள்வதற்காக சட்ட மற்றும் நிர்வாக நிபுணர்களுடன் கலந்தாலோசித்து வருவதாக கனடா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை கனடா கிரிக்கெட் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தொடர்பாக, தொடர்சியாக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றை உறுதிப்படுத்திக்கொள்வதாகவும் தனது உறுப்பினர்கள், பங்குதாரர்கள் மற்றும் கனடாவில் உள்ள கிரிக்கெட் சமூகத்திற்கு உறுதியளிக்க விரும்புகின்றோம் என்று கூறப்பட்டுள்ளது.
கால்கரி லீக் இன் புதிய தலைவர் மோசடிகளில் ஈடுபட்டமை உள்ளக கணக்காய்வில் கண்டறியப்பட்டதை தொடர்ந்து லீக் பொலிஸாரை தொடர்புகொண்டது. கால்கரி பொலிஸ் சேவையின் விசாரணையின் மூலம் முன்னாள் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் ஜனவரி 2014 தொடக்கம் டிசம்பர் 2016 வரை லீக்கிலிருந்து சுமார் $200,000 பணத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது.
லீக்கின் கிளம் ஹவூஸ் மற்றும் மைதானங்களை புனரமைப்பு செய்வதற்காக பணம் செலுத்தப்பட்டதாக கூறப்படுகின்றபோதும் வேலைகள் ஒருபோதும் முடிக்கப்படவில்லை என்பதுடன் தரமற்ற தயாரிப்புக்களும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.எனினும் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.
இது தொடர்பாக கான் கூறும்போது குற்றச்சாட்டுகளை முற்றிலும் பொய் எனவும் இதை நான் தெளிவுபடுத்துவேன் என்றும் பொலிஸார் எனக்கு எதிராக நிரூபிக்க எதுவும் இல்லை என்றும் கூறினார் அத்துடன் நான் கவலைப்படவில்லை. கடந்த எட்டு வருடங்களாக நான் செய்து வருவதைப் போலவே போராடவும் நான் தயாராக இருக்கிறேன் என்றார்.