மேற்கு வங்க மாநிலத்தில், டார்ஜிலிங்கின் மலைகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நேற்று பெய்த தொடர் மழையால் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்தனர்.
பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன, சாலைகள் துண்டிக்கப்பட்டன. பலர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப்படை, காவல்துறை உள்ளிட்டவை மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளன.
நிலைமை மோசமடைந்ததால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மாநில தலைமைச் செயலகத்தில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக மம்தா பானர்ஜி இன்று நேரில் சென்றார்.
2015 ஆம் ஆண்டு டார்ஜிலிங்கில் ஏற்பட்ட நிலச்சரிவில் கிட்டத்தட்ட 40 பேர் உயிரிழந்ததற்குப் பிறகு ஏற்பட்ட மிக மோசமான நிலச்சரிவு இது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து, டார்ஜிலிங்கில் ஏற்பட்ட நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்குமாறு கோர்க்காலாந்து பிராந்திய நிர்வாக உறுப்பினர் அருண் சிக்சி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்

