5.1 C
Scarborough

மேற்கு இந்தியத் தீவுகளை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா

Must read

மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றி கிண்ணத்தை வென்றது.

டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்று 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 518 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

மேற்கு இந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 81.5 ஓவர்களில் 248 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து பாலோ-ஆன் பெற்றது. 2ஆவது இன்னிங்ஸில் அந்த அணி 118.5 ஓவர்களில் 390 ஓட்டங்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

121 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட் செய்த இந்திய அணி 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 18 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 63 ஓட்டங்கள் எடுத்திருந்தது. நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணி 35.2 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 124 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

தனது 20-வது அரை சதத்தை கடந்த கே.எல்.ராகுல் 108பந்துகளில், 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 58 ஓட்டங்களும், துருவ் ஜூரெல் 6 ஓட்டங்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். முன்னதாக சாய் சுதர்சன் 39, தலைவர் ஷுப்மன் கில் 13 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ராஸ்டன் சேஸ் பந்தில் ஆட்டமிழந்தனர்.

7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றி கிண்ணத்தை வென்றது. அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 140 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

ஆட்ட நாயகனாக குல்தீப் யாதவ் தேர்வானார். அவர், முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களையும், 2-வது இன்னிங்ஸில் 3 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தார். தொடர் நாயகனாக ரவீந்திர ஜடேஜா தேர்வானார். அவர், துடுப்பாட்டத்தில் ஒரு சதம் உட்பட 104 ஓட்டங்களும், பந்து வீச்சில் 8 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தார்.

27 வெற்றிகள்: 2002ஆம் ஆண்டு முதல் இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் அணி 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இந்திய அணி ஒரு டெஸ்டில் கூட தோல்வி அடையவில்லை. அதேநேரத்தில் 10 தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. கடைசியாக 2002இல் தான் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கெதிராக இந்திய அணி டெஸ்ட் போட்டியில் தோல்வி கண்டிருந்தது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article