முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியான வாழ்க்கைச் சூழலை வழங்குவதையும், அனைவரையும் உள்ளடக்கிய கலாச்சாரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, அனைவரும் எளிதில் அணுகக்கூடிய இடங்களை உருவாக்குதல் மற்றும் மேம்படுத்தல் (The Enhancing Access to Spaces for Everyone – EASE) திட்டத்திற்காக $2.2 மில்லியன் நிதி ஒதுக்கீட்டை ஒன்ராறியோ மாகாண அரசு அறிவித்துள்ளது.
இந்த நிதி ஒதுக்கீட்டை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக முதியோர் மற்றும் அணுகுமுறை அமைச்சரும் ஸ்காபரோ வடக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ரேமண்ட் சோ (Raymond Cho) கூறினார். அவர் மேலும் கருத்துரைக்கையில், “எளிதில் அணுகக்கூடிய இடங்களை உருவாக்குதல் மற்றும் மேம்படுத்தல் (EASE) திட்டத்தின் மூலம், அதிக எண்ணிக்கையிலான முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் சுறுசுறுப்பாக பங்கேற்க உதவ விரும்புகிறோம். முதல்வர் டக் ஃபோர்டின் தலைமையில், ஒன்ராறியோ மாகாண அரசு அதிக உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி, அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கி, ஒன்ராறியோ மாகாண மக்களின் வாழ்க்கையை ஆரோக்கியமானதாகவும், சிறப்பானதாகவும் மாற்றும்” என்றார்.
EASE திட்டமானது மாநகராட்சிகள், இலாப நோக்கற்ற அமைப்புக்கள், பழங்குடி தன்னார்வ குழுக்கள் ஆகியவற்றுக்கு நிதியை வழங்கும். இதன்மூலம் மின்சார சக்கர நாற்காலி சார்ஜிங் நிலையங்கள், கடற்கரைகளில் சக்கர நாற்காலி செல்லக்கூடிய பாதை அமைத்தல், பூங்காக்களில் அணுகக்கூடிய கழிப்பறைகள் உள்ளிட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் சமூக வாழ்வில் பங்கேற்க உதவும் பொது வசதிகளை உருவாக்க முடியும்.
முதியோரின் உடல், மன நலனை சிறப்பாகப் பாதுகாப்பதற்காக, ஒன்டாரியோ அரசு, அவர்களின் ஆரோக்கியமும் சமூக தொடர்பும் நிறைந்த வாழ்க்கையை ஊக்குவிக்கும் சமூக திட்டங்களில் ஈடுபடும் ‘முதியோருக்கான வாழ்வியல் மையங்களில்’ (Seniors Active Living Centres – SALC) முதலீடு செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஸ்காபரோ வடக்கில் உள்ள டொராண்டோ பெருநகர சீன கலாச்சார மையம் உட்பட 100 புதிய சேவை நிறுவனங்களை இணைத்துள்ளது. இது முதியோருக்கு உயர்தர வாழ்க்கையை உறுதி செய்வதோடு, சமூக உறவுகளை வலுப்படுத்தவும் உதவும்.
எளிதில் அணுகக்கூடிய இடங்களை உருவாக்குதல் மற்றும் மேம்படுத்தலுக்கான நிதி ஒதுக்கீடு திட்டத்திற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன. தகுதியான நிறுவனங்கள் 2025, ஓகஸ்ட் 14ஆம் திகதிக்கு முன்னர் இணையதளம் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.