10.6 C
Scarborough

மின்சார சபை ஊழியர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை – ஓய்வுபெற்ற ஊழியர் சங்கம்

Must read

இலங்கை மின்சார சபை கலைக்கப்பட்டு, மறுசீரமைப்புச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விருப்ப ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு இதுவரை உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை என ஓய்வுபெற்ற ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 09ஆம் திகதி மின்சார சபை கலைக்கப்பட்ட போது, ஓய்வு பெறுபவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்திருந்தது. எனினும், இதுவரையில் அந்த கொடுப்பனவுகளை வழங்க அரசாங்கம் தவறியுள்ளதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு, மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு ஓய்வுபெற்ற ஊழியர் சங்கம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. உரிய நிதி கிடைக்காத காரணத்தினால் தாம் தற்போது பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக எரிசக்தி அமைச்சர் குமார் ஜயகொடிக்கும் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார சபை மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ், சபை 06 நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டது. இதற்கு இணங்காத ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு பெறும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன்போது, ஒரு ஊழியருக்கு அதிகபட்சமாக 50 இலட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் சுமார் 2,000 ஊழியர்கள் கடந்த மார்ச் 09ஆம் திகதி சேவையிலிருந்து விலகினர்.

எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டு காலத்தில் தமது குடும்பங்களுடன் பண்டிகையைக் கொண்டாடக் கூட வசதியின்றி, கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாக ஊழியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இழப்பீட்டுத் தொகை மட்டுமன்றி, அவர்களது ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி, பணிக்கொடை ஆகியவற்றைக் கூட இன்னும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

பல வருடங்களாக மின்சார சபைக்கு ஆற்றிய சேவைக்கான சட்டபூர்வ நிதிப் பாதுகாப்பை அரசாங்கம் தட்டிப்பறித்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக எரிசக்தி பிரதி அமைச்சர் முஹம்மது இல்யாஸ் முஹம்மது அர்க்கமிடம் வினவியபோது, ஓய்வுபெற்ற ஊழியர்கள் தன்னைச் சந்தித்ததை உறுதிப்படுத்தினார். நேற்று அந்தப் பணத்தை வங்கியில் வைப்பிலிடுமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். எனினும், அது தொடர்பான மேலதிக விபரங்களை முழுமையாக ஆராய்ந்த பின்னரே கூற முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, இது குறித்து விபரம் அறிய அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபாலவை தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article