அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வரிகளை முற்றிலுமாக நீக்க வாய்ப்பில்லை எனினும் அமெரிக்கா ஒப்பந்தம் செய்யும் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு கனடாவிற்கு மிகக் குறைந்த கட்டணங்களை வழங்கும் ஒரு ஒப்பந்தத்தில் நாம் ஒன்றிணைய முடியும் என்று கனடாவுக்கான புதிய அமெரிக்க தூதர் பீட் ஹோக்ஸ்ட்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதன்மூலம் இரு நாடுகளும் இணைந்து செயல்படக்கூடிய முக்கியமான கனிமங்கள், வாகனங்கள், எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் fentanyl போன்றவற்றை கனடா முன்னிலைப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
புதன்கிழமை ஒட்டாவாவில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மார்க் கார்னி தனது அரசாங்கம் கனடாவிற்கு சிறந்த ஒப்பந்தத்தைப் பெற போராடி வருகிறது என்றும், ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு தேவையான அனைத்து நேரத்தையும் எடுத்துக்கொள்வேன் என்றும் கூறினார்.
கனடா- ஐக்கிய அமெரிக்கா – மெக்சிகோ சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு (CUSMA) உட்பட்ட பொருட்கள் தவிர்ந்த ஏனைய கனடாவின் இறக்குமதிகளுக்கு எதிராக Trump அண்மைய மாதங்களிலும் தொடர்ச்சியான பிற வரிகளை விதித்துள்ளார். கனடாவும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து CUSMA-இற்கு உட்படாத வாகனங்களுக்கும், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து கனேடிய தயாரிப்பற்ற CUSMA-உட்படாத வாகனங்களுக்கும் 25 சதவீத வரிகளை விதிக்கும் என்று கார்னி அறிவித்தார்.
நடந்து வரும் வர்த்தக மோதலை சமாளிக்க உதவும் வகையில், கடந்த மாதம் சில வாகன உற்பத்தியாளர்களுக்கு கனடா அரசாங்கம் தொடர்ச்சியான நிவாரண நடவடிக்கைகளை அறிவித்தது. அத்துடன் கடந்த மாத தொடக்கத்தில் ட்ரம்ப் தனது நீண்டகால வாக்குறுதியளிக்கப்பட்ட பரஸ்பர-கட்டண திட்டத்தை வகுத்தார், இருப்பினும் CUSMA காரணமாக கனடா வரிகளிலிருந்து தப்பித்தது. ஆனாலும் ஒப்பந்தம் 2026 இல் அமெரிக்காவால் மீள் பரிசீலனை செய்யப்படவுள்ளது.
கனடாவின் இறையாண்மைக்கு ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுத்து வருவது குறித்து பீட் ஹோக்ஸ்ட்ராவிடம் வினாவிய போது கனடா அமெரிக்காவை நம்பலாம் என்றும், ஜனாதிபதியும் பிரதமரும் ஒரு ஒப்பந்தத்தை விரைவாக மேற்கொள்ள முடியும் என்றும் மீண்டும் வலியுறுத்தினார்.