சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘பராசக்தி’. ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜன.10-ல் வெளியாகிது. இதன் பாடல் வெளியீட்டு விழா தனியார் கல்லூரி ஒன்றில் நடந்தது. படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
விழாவில் சிவகார்த்திகேயன் பேசும்போது, “பராசக்தி என்ற பெயரே மிகுந்த வலிமை கொண்டது. அந்த பெயருக்கு ஏற்றபடி, இந்தப் படமும் அதே அளவு தாக்கத்தை ஏற்படுத்தும். 1960-களுக்கு டைம் டிராவல் செய்து பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் படம் இது. மாணவர்கள் எப்போதுமே சக்தி வாய்ந்தவர்கள். அவர்கள் எந்த அளவுக்கு வலிமை கொண்டவர்களாக இருந்தார்கள் என்பதை இந்தப் படம் அழுத்தமாக காட்டுகிறது.

