மன்னார் பகுதியில் புதிதாக நிறுவப்படவுள்ள இரண்டாம் கட்ட காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று செவ்வாய்க்கிழமை (05) இரண்டாவது நாளாக முழு கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மன்னார் – மதவாச்சி பிரதான வீதியூடாக காற்றாலை கோபுரங்களுக்கான பொருட்களை மன்னார் நகருக்குள் கொண்டு வருவதற்கும், இரண்டாம் கட்ட காற்றாலை திட்டங்களை மன்னாரில் நிறுவுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்தே இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தத் திட்டங்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் எனவும், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளாரின் தலைமையில் இவ் போராட்டம் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், மன்னார் நகரில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. மீனவர்களும் கடலுக்குச் செல்லாமல் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.
இரண்டு நாட்களாக இந்தப் போராட்டத்தில் அருட்தந்தையர்கள், பொது அமைப்புகள், சிவில் அமைப்புகள், மீனவ அமைப்புகள், வர்த்தகர்கள், பொதுமக்கள், இளைஞர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.
நேற்று திங்கட்கிழமை ( 04) இரவு, காற்றாலை கோபுரங்களைக் கொண்டுவருவதற்காக மன்னார் சௌத்பார் பகுதியில் உள்ள வீதிகள் திடீரென புனரமைக்க முயற்சிக்கப்பட்டது.
ஆனால், மக்களின் கடுமையான எதிர்ப்புக் காரணமாக அந்தப் பணிகள் உடனடியாக இடை நிறுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.