9 C
Scarborough

மத்திய மாகாணத்துக்கு மீண்டும் மண்சரிவு, வெள்ள அபாய எச்சரிக்கை

Must read

கடந்த 48 மணித்தியாலங்களில் கண்டி, உடுதும்பரை பகுதியில் 300 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ள நிலையில், சில இடங்களில் மண்சரிவுகள் பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.

அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர இது குறித்துக் கூறுகையில், இந்நிலைமையால் தெனபிட்டிய பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மண்சரிவினால் சில வீடுகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதுடன், அந்த வீடுகளில் இருந்த மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அத்துடன், நுவரெலியாவில் நிலவும் மழை காரணமாக ரிகில்லகஸ்கடை பகுதியில் வாலப்பனை வீதி மண்சரிவினால் தடைப்பட்டுள்ளது.

மாத்தளை மாவட்டத்தில் நேற்று (18) 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

மேலும் சில சிறிய அளவிலான மண்சரிவுகள் பதிவாகியுள்ள போதிலும், அவை குறித்த விரிவான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை. இன்றும் மழை பெய்யக்கூடும் என்பதால் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வடகிழக்கு பருவநிலை தீவிரமடைந்துள்ளதால் மத்திய மாகாணத்தில் அதிக மழை பெய்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட தெரிவித்தார்.

ஏதேனும் அவசர அனர்த்த நிலை ஏற்பட்டால் நிவாரணம் வழங்கத் தயாராக இருப்பதாகவும், மண்சரிவு அறிகுறிகள் தென்படும் மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நீர்ப்பாசன பணிப்பாளர் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார கூறுகையில், மகாவலி கங்கையின் மணம்பிட்டிய பகுதியில் நீர்மட்டம் தற்போது சிறு வெள்ள மட்டத்தை விடவும் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.

இதன் காரணமாக திருகோணமலை வரையிலான தாழ்நிலப்பகுதிகள் மேலும் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதோடு, சோமாவதிய பிரவேச வீதி ஏற்கனவே நீரில் மூழ்கியுள்ளது.

மல்வத்து ஓயாவின் தந்திர்மலை நீர்மட்டம் சிறு வெள்ள மட்டத்தை எட்டியுள்ள போதிலும், நீர்மட்டம் மேலும் அதிகரிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் 73 பிரதான நீர்த்தேக்கங்களில் 34 நீர்த்தேக்கங்களும், 48 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது வான்பாய்கின்றன.

எவ்வாறாயினும், எந்தவொரு நீர்த்தேக்கத்திலிருந்தும் அபாயகரமான முறையில் நீர் திறந்துவிடப்படவில்லை எனத் தெரிவித்த அவர், திடீர் நீர் அதிகரிப்பு அல்லது மாற்றங்கள் குறித்து அவதானமாக இருந்து அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article