மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பல பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) பணிப்பாளர் நாயகம் பொறியாளர்ஆசிரி கருணாவர்தன இது குறித்து கூறுகையில்,
மோசமான வானிலை காரணமாக நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் உள்ள பல பாடசாலைகள் நேரடியாக நிலச்சரிவு அபாய வலயங்களுக்குள் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சில பாடசாலைகளை பாதுகாக்க பொறியியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம் என்றும், அத்தகைய நடவடிக்கைகள் சாத்தியமில்லாத பாடசாலைகள் குறித்து கல்வி அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மத்திய மாகாணத்தில் உள்ள 160 பாடசாலைகளை உள்ளடக்கிய விரிவான மதிப்பீட்டு அறிக்கை ஏற்கனவே கல்வி அமைச்சர், பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், கல்வி அமைச்சு பரிந்துரைகளின்படி செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.
அடையாளம் காணப்பட்ட அதிக ஆபத்துள்ள பாடசாலைகள் குறித்து தற்போது மேலதிக ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

