இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கிடையிலான போரால் இலங்கை பொருளாதாரத்துக்கு ஏற்படப்போகும் தாக்கங்களை எதிர்கொள்வதற்குரிய அரசாங்கத்திடம் வேலைத்திட்டங்கள் எவை என்று கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வினா தொடுத்துள்ளார்.
“இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கிடையிலான போரால் இலங்கைக்கு தாக்கங்கள் ஏற்படும். இவற்றை எதிர்கொள்வதற்குரிய வேலைத்திட்டங்கள் அரசாங்கத்திடம் உள்ளனவா? மேற்படி போரால் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடும். அதேபோல டொலர் நெருக்கடியும் ஏற்படும்.
எரிபொருள் விலை அதிகரிக்கும். ஏற்றுமதி, இறக்குமதி கட்டணங்களும் அதிகரிக்கும். சுற்றுலாத்துறையும் பாதிக்கப்படும். நிலைமை இவ்வாறிருக்கையில் தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர்கள் பொறுப்பற்ற விதத்தில் கருத்து வெளியிட்டுவருகின்றனர். சிறுபிள்ளைத்தனமான அறிவிப்புகளை வெளியிடாமல், தூரநோக்கு சிந்தனை அடிப்படையில் அரசாங்கம் செயற்பட வேண்டும்.” – எனவும் திஸ்ஸ அத்தநாயக்க வலியுறுத்தியுள்ளார்.