செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு, கனடிய தமிழர் பேரவை , ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதமொன்றும் அனுப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி முன்னெடுக்கப்படும் அணையா விளக்கு போராட்டத்திற்கும் கனடிய தமிழர் பேரவை தனது ஆதரவைத்தெரிவித்துள்ளது.
‘ இலங்கையின் வடபகுதியில் செம்மணி சிந்துபாத்தி மயானத்தில் சமீபத்தில் மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டமை குறித்து ஆழ்ந்த கரிசனையுடனும் கவலையுடனும் இந்த கடிதத்தை எழுதுகின்றோம்.
சிறுவர்கள் உட்பட பலரின் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளமை தமிழ் சமூகத்தினை மீண்டும் உலுக்கியுள்ளது.
மன்னார் , கொக்குதொடுவாய் மற்றும் திருக்கேதீஸ்வரம் போன்ற மனித புதைகுழிகள் முழுமையாக தோண்டப்படாததும், தெளிவற்ற விசாரணைகளும், தமிழ் மக்களின் நம்பிக்கைகளை மோசமாக பாதித்துள்ளன.
நீதியை உறுதி செய்வதற்காக உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.
சர்வதேச தடயவியல் நிபுணர்களையும் மனித உரிமை நிபுணர்களையும் அகழ்வு பணிக்கு அழைக்குமாறு கோருகின்றோம்.” – எனவும் கனடிய தமிழர் பேரவை ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.