தெற்கு கரீபியனில் போதைப்பொருள் கடத்தும் கப்பலின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 11 “போதைப்பொருள் பயங்கரவாதிகள்” உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
வெனிசுலா கும்பலான ட்ரென் டி அரகுவா உறுப்பினர்களை குறிவைத்து அமெரிக்க படையினர் செவ்வாய்க்கிழமை இந்த தாக்குதலை மேற்கொண்டிருந்ததாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளாக கப்பல் சர்வதேசக் கடற்பரப்பில் இருப்பதாகவும், அமெரிக்காவிற்கு சட்டவிரோத போதைப்பொருட்களை கடத்தி வருவதாகவும் டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
செவ்வாயன்று ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், வெனிசுலா அருகே “போதைப்பொருள் கடத்தும் படகை” அமெரிக்கப் படைகள் “சுட்டு வீழ்த்தியதாக” தெரிவித்துள்ளார்.
குறித்த படகில் அதிகளவான போதைப் பொருள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், அந்தக் கப்பலில் என்ன வகையான போதைப்பொருட்களை எடுத்துச் செல்லப்பட்டது என்ற தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.
இதேவேளை, அண்மைய வாரங்களில் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக டிரம்ப் நிர்வாகம் இராணுவ மற்றும் அரசியல் அழுத்தத்தை கடுமையாக அதிகரித்துள்ளது.
எனினும், அமெரிக்க இராணுவத் தலையீட்டின் எந்தவொரு முயற்சியையும் வெனிசுலா எதிர்த்துப் போராடும் என்று மதுரோ பதிலளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.