எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார சேதத்திற்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடாக வழங்குமாறு இலங்கை உயர் நீதிமன்றம் இன்று (24) கப்பல் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
எக்ஸ்-பிரஸ் பேர்ல் கொள்கலன் கப்பல் 2021 ஆம் ஆண்டு கொழும்பு கடற்கரையில் தீப்பிடித்ததுடன் அந்த இடத்திலேயே மூழ்கியது.
இந்த சம்பவம் நாட்டின் வரலாற்றில் மிக மோசமான சுற்றுச்சூழல் பேரழிவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
இழப்பீடு திறைசேரி செயலாளருக்கு வழங்கப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தீர்ப்பு வழங்கப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடத்திற்குள் பிரதிவாதி 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஆரம்பக் கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும், அதை தவணைகளில் செலுத்தலாம் என்றும் நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஈ.ஏ.ஜி.ஆர். அமரசேகர தலைமையில் எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ல் இழப்பீட்டு ஆணையத்தை நிறுவவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட குற்றங்கள், தண்டனைச் சட்டத்தில் உள்ள குற்றங்கள், கடல் மற்றும் கடலோர சூழல் தொடர்பான பல சட்டங்கள் உட்பட, வெளிப்படுத்தப்பட்ட அனைத்து குற்றங்கள் குறித்தும், தீர்ப்பு வழங்கப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் மேலும் விசாரணைகளை நடத்தி விசாரணையை முடிக்க குற்றவியல் புலனாய்வுத் துறைக்கு (CID) தேவையான ஆலோசனையை வழங்குமாறு நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டது. பின்னர், அனைத்து குற்றவாளிகளுக்கும் எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பேரழிவைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதன் மூலம், பொறுப்பு கூறவேண்டிய அப்போதைய அமைச்சர் நாலக கொடஹேவா மற்றும் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை (MEPA) அடிப்படை மனித உரிமைகளை மீறியதாகவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.