ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று காலை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனை அவரது கொழும்பு அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிராக எதிர்வரும் 21 ஆம் திகதி எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள பொதுப் பேரணி குறித்து விளக்குவதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரைத் தாம் சந்தித்தார் என்று சந்திப்பின் பின்னர் நாமல் எம்.பி. கூறினார்.
அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளமை மற்றும் எதிர்க்கட்சிப் பேரணியில் முன்னிலைப்படுத்த விரும்பும் முக்கிய பிரச்சினைகள் குறித்து சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது என்றும் நாமல் எம்.பி. தெரிவித்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி இந்தப் பேரணியில் பங்கேற்காது என்றாலும், எதிர்க்கட்சியின் முக்கிய அங்கமான அந்தக் கட்சிக்கு இந்த விடயம் குறித்துத் தெரியப்படுத்துவது முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நீண்ட காலமாகத் தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தலை மேலும் ஒத்திவைக்காமல் நடத்த வேண்டியதன் அவசியத்தை தானும் சுமந்திரனும் ஒப்புக்கொண்டனர் என நாமல் எம்.பி. மேலும் கூறினார்.
மாகாண நிர்வாகத்தை வலுப்படுத்த அரசமைப்பின்படி இந்தத் தேர்தலை நடத்துவது மிக முக்கியம் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்தச் சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசமும் கலந்துகொண்டார்.

