காயத்ரி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தின் பணிகள் மும்முரமாக தொடங்கப்பட்டுள்ளன.
தமிழில் ‘விக்ரம் வேதா’ படத்துக்கு பின் புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் எந்தவொரு படமும் வெளியாகவில்லை. தற்போது சிவகார்த்திகேயனை வைத்து அடுத்த படத்தை இயக்க புஷ்கர் – காயத்ரி இணை முடிவு செய்திருக்கிறது. இதற்காக கதை, திரைக்கதை ஆகியவை இறுதி செய்யப்பட்டுவிட்டன. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைக்கவுள்ளார்.
இந்தக் கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இப்போதைக்கு வெளியாகாது. ஆனால், படத்தின் முதற்கட்டப் பணிகளை தொடங்கிவிட்டார்கள். படப்பிடிப்பிற்கான இடங்கள் தேர்வு, நடிகர்கள் தேர்வு ஆகியவை விரைவில் தொடங்கவுள்ளது. அடுத்ததாக சிபி சக்கரவர்த்தி படம், பின்பு வெங்கட்பிரபு படம் ஆகியவை முடித்துவிட்டு புஷ்கர் – காயத்ரி படத்துக்கு தேதிகள் ஒதுக்கவுள்ளார் சிவகார்த்திகேயன்.
தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘பராசக்தி’ படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகின்றன. முதலில் சிவகார்த்திகேயன் நடிப்பில் செப்டம்பர் 5-ம் தேதி ‘மதராஸி’ வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து பொங்கல் வெளியீடாக ‘பராசக்தி’ வெளியாக இருக்கிறது.