புதிய பாப்பரசரை தேர்ந்தெடுப்பதற்கான மாநாடு மே 7-ஆம் திகதி ஆரம்பமாகும் என்று வத்திக்கானின் பத்திரிகை அலுவலகமான ஹோலி சீ தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில், “புதிய பாப்பரசரை தேர்ந்தெடுப்பதற்கான மாநாடு மே 7-ஆம் திகதி ஆரம்பமாகும். தற்போது ரோமில் உள்ள கார்டினல்கள் திங்கள்கிழமை(28)) கூடி தங்கள் ஐந்தாவது பொது சபையில் இந்த முடிவை எடுத்தனர்.
இந்த மாநாடு வத்திக்கானில் சிஸ்டைன் சேப்பலில் நடைபெறும். மாநாடு நடைபெறும் நாட்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான போப் பிரான்சிஸ் கடந்த 21-ம் திகதி காலமானார். அவரது மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்திருந்தனர். போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு கடந்த 26-ம் திகதி நடைபெற்றது. இதில், இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் நேரில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
ஜார்ஜ் பெர்கோகிலோ என்ற இயற்பெயர் கொண்ட போப் பிரான்சிஸ், லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த முதல் போப் என்ற பெருமையை பெற்றவர். 2013-ம் ஆண்டும் மார்ச் 13-ம் திகதி 266-வது போப்பாக தேர்வு செய்யப்பட்ட அவர், கத்தோலிக்க கிறிஸ்தவ மத நடைமுறைகளில் அதிக சீர்திருத்தங்களை மேற்கொண்டவராக அறியப்படுகிறார்.