அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிவிதிப்புக்கு எதிரான எதிர்பு வரிகள் விரைவில் அமுல்படுத்தப்பட வேண்டுமென கொன்சவேடிவ் கட்சியின் தலைவர் பியர் பொலிவ்ரே கோரிக்கை முன்வைத்திருக்கிறார்.
தமது ஆட்சியில், பாரம்பரிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் என்ற எண்ணக்கருவின் கீழ் பாதிக்கப்படும் தொழில்களுக்கு தற்காலிக கடன் திட்டம் அறிவிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
அதேபோல் கனேடிய பொருளாதார முன்னேற்றத்துக்கான ஒப்பந்தம் ஒன்றும் கைசாத்திடப்படுமென அவர் அறிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் மீளாய்வு செய்யப்படுவதுடன் அமெரிக்க – கனடா ஒப்பந்தத்திலிருந்து வருகின்ற வருவாய் கனேடிய இராணுவத்தின் முன்னேற்றத்துக்காக நேரடியாக ஒதுக்கப்படும் என்பதையும் அவர் அறிவித்துள்ளார்.
மேலும், ஆட்சிக்கு வரும்போது அமெரிக்காவுடன் மீண்டும் புதியதொரு ஒப்பந்தம் கொண்டுவரப்படும் என்றும் அதனூடாக கனடாவின் உரிமை பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கனடாவின் இயற்கை வளம், மொழி, விவசாய வளங்கள், பணம் உரிமைகள் விட்டுக்கொடுக்காமல் பாதுகாக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். அத்துடன் புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேநேரம் அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் நீர்,விவசாய உற்பத்திகள் மற்றும் கச்சா எண்ணெய் என்பன மீள் பரிசீலனைக்கு உள்ளாக்கப்படும் என்பதையும், கனேடிய உற்பத்திகளை கொள்வனவு செய்வதை ஊக்குவிப்பதற்கான சட்டமூலங்கள் கொண்டுவரப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
அதனையடுத்து மெக்சிகோ மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் புதிய ஒப்பந்தங்களை செய்து, அமெரிக்காவினால் ஏற்படும் பொருளாதார இழப்புகளை சமப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் பசுமை பொருளாதார முயற்சிகளில் அதிகளவிலான முதலீடுகளை மேற்கொள்வதில் கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.