யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில், ‘புதிய அரசியலமைப்புத் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகளை சந்தித்து வருகின்றார். உங்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சிறீதரனையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இது தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன? என்று கேட்கப்பட்டது.
இதன்போது சுமந்திரன் தெரிவித்ததாவது:
அரசாங்கத்திடம் ஒரு கோரிக்கையை விடுத்து நாங்கள் தீர்மானம் ஒன்றை எடுத்திருக்கின்றோம். அரசாங்கம் செய்வதாகச்சொன்ன விடயங்களை முதலில் செய்ய வேண்டும். அந்த விடயங்கள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இவ்வாறிருக்கையில், நாங்கள் புதிய அரசமைப்புத் தொடர்பில் யோசனைகளை முன்வைத்தால், அது அரசாங்கத்துக்கு ஏதுவாக அமையலாம். ஆகையால் முதலில் அரசாங்கத்தின் கருத்துக்கள் பெறப்பட வேண்டியிருக்கின்றது.
இந்த விடயங்கள் தொடர்பில் முடிவுகளை எடுப்பதற்கு எமது கட்சி ஒரு குழுவை நியமித்திருக்கின்றது. அந்தக் குழுவே இது தொடர்பான விடயங்களை முன்னெடுக்கும் -என்றார்.