பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் செவ்வாயன்று தனது பாதுகாப்பு அமைச்சரும், தனக்கு மிகவும் நெருக்கமானவருமான செபஸ்டியன் லெகோர்னுவை புதிய பிரதமராக நியமித்துள்ளார்.
நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 24 மணி நேரத்திற்குப் பின்னர் புதிய பிரதமர் நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இது பிரான்சிஸ் தொடர்ந்து ஆழமடைந்து வரும் அரசியல் நெருக்கடியைத் தீர்க்கும் வகையில் எடுக்கப்பட்ட அவசர முடிவென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சின் அடுத்த வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றும் நோக்கில் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பணியை புதிய பிரதமரிடம் ஜனாதிபதி வழங்கியுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளதுர்.
மேலும் ஜனாதிபதி தன்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கும் செபஸ்டியன் லெகோர்னு நன்றி தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஒன்பது மாதங்களே பதவியில் இருந்த முன்னாள் பிரதமர் பிரான்சுவா பேய்ரூ எதிராக கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம், பிரான்சின் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து அவர் தனது பதவி விலகல கடிதத்தை ஜனாதிபதி மெக்ரோனிடம் கையளித்தார். இந்நிலையில், புதிய பிரதமர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, 2027 ஜனாதிபதித் தேர்தலில் பிரெஞ்சு தீவிர வலதுசாரிகள் வெற்றிபெற இதுவரை இல்லாத அளவுக்கு சிறந்த வாய்ப்பைப் பெறுவார்கள் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
எவ்வாறாயினும், மெக்ரோன் மூன்றாவது முறையாக போட்டியிட அரசியலமைப்பு ரீதியாக தடைசெய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.