உலகின் பிரபல இசைக்குழுவொன்றுக்கு கனடாவிற்குள் பிரவேசிக்க அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது. அயர்லாந்து ராப் இசைக்குழுவான “க்னீகேப்” விற்கு கனடாவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை டொரண்டோ நாடாளுமன்ற உறுப்பினர் வின்ஸ் காஸ்பாரோ சமூக ஊடகமான X-ல் பதிவிட்டுள்ளார்.
“கனடாவிற்குள் நுழைய க்னீகேப் குழுவிற்கு தகுதி இல்லை என்று தீர்மானித்துள்ளோம். அரசியல் வன்முறையை ஆதரிப்பது, பயங்கரவாதத்தை ஊக்குவிப்பது, யூத விரோத கருத்துகள் மற்றும் வெறுப்புரைகளை எங்கள் அரசு சகிக்காது,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
மூன்று உறுப்பினர்களைக் கொண்ட இந்த குழு அக்டோபரில் டொரண்டோவில் இரண்டு கச்சேரிகளிலும், வான்கூவரில் இன்னும் இரண்டு கச்சேரிகளிலும் பங்கேற்க திட்டமிட்டிருந்தது.
“இந்த குழு அரசியல் வன்முறையை வலுப்படுத்தி, ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளது,” என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கனடாவின் இந்த நடவடிக்கை, இந்த கோடையில் ஹங்கேரி எடுத்த அதே மாதிரியான முடிவைத் தொடர்ந்து வந்துள்ளது.
ஹங்கேரி அதிகாரிகள், இந்த இசைக்குழுவின் வருகை தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்று கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.