நடிகர் மதும்கேஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘காதல் ரீ செட் ரிப்பீட் ‘ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘உன்னை நினைத்தே..’ எனும் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் ‘காதல் ரீ செட் ரிப்பீட்’ எனும் திரைப்படத்தில் மதும்கேஷ், அர்ஜுன் அசோகன், ஜியோ சங்கர், எம். எஸ். பாஸ்கர், ஜெயப்பிரகாஷ் , விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். இளமை துள்ளலான காதல் கதையாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை டி ஸ்டுடியோஸ் மற்றும் டென்வி புரொடக்ஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் டைட்டிலுக்கான காணொளி மற்றும் ஒரு பாடல் ஆகியவை வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ‘உன்னை நினைத்தே உயிரை வளர்த்தேன்..’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த பாடலை பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து எழுத பின்னணி பாடகர் சித் ஸ்ரீ ராம் பாடியிருக்கிறார். மெல்லிசையாகவும் பால்ய கால நினைவுகளை மீட்டெடுக்கும் பாடல்வரிகளாலும் உருவாகி இருக்கும் இந்தப் பாடல்.. ரசிகர்களிடம் பாரிய வரவேற்பை பெற்று வருகிறது.

