நடப்பு ‘லா லிகா’ சீசனின் முதல் எல் கிளாசிகோ போட்டியில் பார்சிலோனாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ரியல் மாட்ரிட் அணி. இதில் ரியல் மாட்ரிட் அணிக்கான வெற்றி கோலை ஜூட் பெல்லிங்கம் பதிவு செய்தார்.
ஞாயிற்றுக்கிழமை ஸ்பெயினில் உள்ள மாட்ரிட் நகரில் இந்த ஆட்டம் நடைபெற்றது. இதில் சிறந்த அணிகளான ரியல் மாட்ரிட் மற்றும் பார்சிலோனா பலப்பரீட்சை மேற்கொண்டன. கடந்த சீசனில் நான்கு முறை இந்த இரண்டு அணிகளும் விளையாடின. நான்கிலும் பார்சிலோனா வெற்றி பெற்றது. அதனால் இந்த முறையை வெற்றி யாருக்கு என்ற எதிர்பார்ப்பு எகிறி இருந்தது.
ஆட்டத்தின் 22-வது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்தார் ரியல் மாட்ரிட் அணியின் எம்பாப்பே. அதற்கான பதில் கோலை 38-வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் ஃபெர்மின் லோபஸ் பதிவு செய்தார். அதனால் ஆட்டம் 1-1 என சமன் ஆனது. இருந்தும் முதல் பாதி ஆட்டம் முடிவதற்குள் ரியல் மாட்ரிட் அணியின் ஜூட் பெல்லிங்கம் 43-வது நிமிடத்தில் கோல் பதிவு செய்தார். அதன் மூலம் 2-1 என ரியல் மாட்ரிட் முன்னிலை பெற்றது.
அதன் பின்னர் ஆட்டம் முடியும் வரை பார்சிலோனா அணி முயன்றும் கோல் பதிவு செய்ய முடியவில்லை. அந்த அணியின் பெட்ரி இரண்டு மஞ்சள் கார்டுகளை பெற்றதால் ஆட்டத்தில் இருந்து வெளியேறினார். இந்த வெற்றியின் மூலம் நடப்பு சீசனில் 10 ஆட்டங்களில் 9 வெற்றியை பெற்றுள்ளது ரியல் மாட்ரிட் அணி. 27 புள்ளிகளுடன் அந்த அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
இந்த ஆட்டத்தில் பார்சிலோனா அணியின் இளம் நட்சத்திரமான லாமின் யாமல் மற்றும் ரியல் மாட்ரிட் அணியின் வினிசியஸ் ஜூனியர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
HinduTmail

