8.5 C
Scarborough

பாதிக்கப்பட்ட மலையக மக்களின் நல வாழ்வு குறித்து கனடிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை

Must read

இலங்கையின் மலையகப் பகுதிகளில் ‘டித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் காரணமாகப் பெருமளவிலான உயிரிழப்புகளும், சொத்து இழப்புகளும் ஏற்பட்டுள்ளமை குறித்து கனடிய தமிழர் பேரவை தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, நீண்டகாலமாகப் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள தோட்டத் தொழிலாளர் சமூகங்கள் தங்களின் இருப்பிடங்களை இழந்து இடம்பெயர்ந்துள்ள நிலையில், அவர்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழுந்துள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இயற்கை அனர்த்தங்கள் நிகழும் போதெல்லாம் தற்காலிகத் தீர்வுகளை வழங்குவதற்குப் பதிலாக, மீண்டும் மீண்டும் பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்கு நிரந்தரமான மற்றும் பாதுகாப்பான இடமாற்றத் திட்டங்களை இலங்கை அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என பேரவை வலியுறுத்தியுள்ளது.

ஒவ்வொரு முறையும் அனர்த்தம் நிகழ்ந்த பிறகு மக்களை மீண்டும் அதே ஆபத்தான பகுதிகளுக்கே திருப்பி அனுப்புவது அவர்களின் உயிருக்குத் தொடர்ச்சியான அச்சுறுத்தலையே ஏற்படுத்தும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களை அதே மாவட்டங்களுக்குள் பாதுகாப்பான நிலங்களில் மீள்குடியேற்ற முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

இந்த மீள்குடியேற்றமானது வெறும் வீட்டு வசதியுடன் நின்றுவிடாமல், அவர்களின் வாழ்வாதாரம், சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற அடிப்படைத் தேவைகளையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான திட்டமாக அமைய வேண்டும் என்பதை பேரவை வலியுறுத்தியுள்ளது.

மலையகப் பகுதிகளில் பாதுகாப்பான நிலங்கள் கிடைக்காத பட்சத்தில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் குடியேற விரும்பும் குடும்பங்களுக்கு விருப்பத்தின் அடிப்படையில் அங்கு நிலங்களை வழங்கும் திட்டத்தைக் கனடிய தமிழர் பேரவை ஆதரித்துள்ளது.

தமிழ் மொழிச் சூழல் மற்றும் பண்பாட்டுத் தொடர்ச்சி காரணமாக, இக்குடும்பங்களின் கௌரவமான வாழ்வு அங்கு உறுதி செய்யப்படும் என அந்த அமைப்பு நம்புகிறது.

இறுதியாக, எந்தவொரு இடமாற்றமும் கட்டாயப்படுத்தப்படாமல் முழுமையாக மக்களின் சம்மதத்துடனும், தகவலறிந்த விருப்பத்தின் அடிப்படையிலும் மட்டுமே நடைபெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையகத் தமிழ்ச் சமூகங்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த இலங்கை மற்றும் புலம்பெயர் அமைப்புகளுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாகவும் கனடிய தமிழர் பேரவை தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article