6.6 C
Scarborough

பாகிஸ்தான் ராணுவத்தினர் 11 பேர் கொலை: தலிபான்கள் பொறுப்பேற்பு!

Must read

பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் தெஹ்ரீக் இ தலிபான் பாகிஸ்தான் அமைப்பு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அந்நாட்டு ராணுவத்தைச் சேர்ந்த 11 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கனிஸ்தான் எல்லை அருகே, கைபர் பக்துன்கவா மாகாணத்தின் ஓராக்காய் மாவட்டத்தில் தலிபான் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் அங்கு விரைந்தனர். 39 வயது லெப்டினன்ட் கர்னல் ஜூனைத் ஆரிப் தலைமையில் சென்ற ராணுவத்தினர், தலிபான் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதில், தலிபான் தீவிரவாதிகள் 19 பேர் கொல்லப்பட்ட நிலையில், ராணுவத் தரப்பில் லெப்டினன்ட் கர்னல் ஜூனைத் ஆரிப், மேஜர் தய்யப் ரஹத் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.

‘தியாகம் ஒருபோதும் வீண் போகாது’ – இந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வெளியிட்டுள்ள அறிக்கையில், “19 பயங்கரவாதிகளைக் கொன்றதற்காக நாட்டின் பாதுகாப்புப் படையினருக்கு வாழ்த்துகள். இந்த மோதலில் உயிரிழந்த லெப்டினன்ட் கர்னல் ஆரிப், மேஜர் ரஹத் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினரின் தியாகத்துக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாதுகாப்புப் படையினரின் தியாகம் ஒருபோதும் வீண் போகாது. பயங்கரவாதிகளின் தீய நோக்கங்களை நாங்கள் நசுக்குவோம். பாகிஸ்தானின் ஒருமைப்பாடடுக்கு தீங்கு விளைவிக்கும் சக்திகள் வெற்றிபெற அனுமதிக்க மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் தற்போதுள்ள ஆட்சியை கவிழ்த்து, கடுமையான இஸ்லாமிய ஆட்சியைக் கொண்டு வரும் நோக்கில் தெஹ்ரீக் இ தலிபான் பாகிஸ்தான் செயல்பட்டு வருகிறது. இதற்கு ஆப்கனிஸ்தானில் ஆட்சியில் உள்ள தலிபான்கள் ஆதரவாக செயல்படுவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டி வருகிறது. எனினும், இதனை ஆப்கன் ஆட்சியாளர்கள் மறுத்து வருகின்றனர்.

HinduTamil

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article