பாகிஸ்தானிலுள்ள ஆப்கானிஸ்தானியர்களை முறையான அறிவிப்பு எதுவும் இல்லாமல் விசாரிப்பதாக ஆப்கானிஸ்தான் தூதரகம் குற்றஞ்சாட்டியுள்ளது.
ஆப்கானிஸ்தான் அகதிகள் விவகாரத்தில் பாகிஸ்தான் அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து ஆப்கானிஸ்தான் தூதரகம் கடுமையான விமர்சனத்துடன் அறிக்கை வெளியிட்டது.
இது தொடர்பாக அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:-
பாகிஸ்தான் அரசாங்கம் அனைத்து ஆப்கானிஸ்தான் அகதிகளையும் நாட்டிலிருந்து வெளியேற்ற விரும்புகிறது. வெளியேற்றம் விரைவாக நடக்கிறது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் அருகிலுள்ள ராவல்பிண்டியிலும் உள்ள ஆப்கானிஸ்தான் நாட்டினர் சோதனை செய்யப்பட்டு கைது செய்யப்படுகின்றனர். இந்த நகரங்களை விட்டு வெளியேறி பாகிஸ்தானின் பிற பகுதிகளுக்கு இடம்பெயரும்படி பொலிஸார் உத்தரவிடுகின்றனர்.
முறையான அறிவிப்பு எதுவும் இல்லாமல் ஆப்கானிஸ்தானியர்களை பிடித்து விசாரிக்கிறார்கள். இது தொடர்பாக இஸ்லாமாபாத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்திற்கு எந்தவொரு முறையான தகவலும் தெரிவிக்கப்படவில்லை.இவ்வாறு ஆப்கானிஸ்தான் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.