பாகிஸ்தானில் சர்வதேச மகளிர் தினத்தை தேசிய விடுமுறையாக அங்கீகரிக்க வேண்டுமென வுமன்ஸ் மார்ச் எனும் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் பத்திரிக்கையாளர் சங்கத்தில் நேற்று (6) நடைபெற்ற சந்திப்பில், வுமன்ஸ் மார்ச் அமைப்பின் முக்கிய ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அந்நாட்டின் சமூக ஆர்வலர்கள் சர்வதேச மகளிர் நாளான ‘மார்ச் 8’ பாகிஸ்தானின் தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தினர்.
மேலும், இந்தச் சந்திப்பின் போது அந்நாட்டின் மனித உரிமை, சமூக நீதி மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய விவகாரங்கள் குறித்தும் பேசப்பட்டது.
பாகிஸ்தானில் நடைபெறும் பாலினப் பாகுபாடுகள், வன்முறைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குழந்தைத் திருமணங்கள் தடை செய்யப்பட வேண்டும் எனவும் திருநங்கைகளுக்கான உரிமை பாதுகாப்புச் சட்டம் அமுல்படுத்தி அவர்களுக்கு எதிரான வன்முறைகளின் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
சமூக நீதி குறித்து கூறுகையில், சிறுபான்மையின சமூகத்தினருக்கு கல்வி, சுகாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு ஆகிய அத்தியாவசியங்கள் வழங்கப்பட அரசு வழிவகுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.
சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்து, “பசுமை பாகிஸ்தான்” போன்ற அந்நாட்டு சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் திட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர அவர்கள் அழைப்பு விடுத்ததோடு அந்நாட்டில் பாலின சமத்துவத்தை உருவாக்க வேண்டுமெனவும் அவர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டது.