கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச விளையாட்டங்கில் தற்போது நடைபெற்றுவரும் ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்துக்கு 259 ஓட்டங்களை வெற்றி இலக்காக இலங்கை நிர்ணயித்துள்ளது.
இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 258 ஓட்டங்களைக் குவித்தது.
இந்த வருட மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை பெற்ற அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும்.
உலகக் கிண்ணத்தின் முதல் இரண்டு போட்டிகளில் 4ஆம் இலக்கத்தில் துடுப்பெடுத்தாடிய விஷ்மி குணரட்ன முதல் தடவையாக இன்று ஆரம்ப வீராங்கனையாக களம் இறங்கி அணித் தலைவி சமரி அத்தப்பத்துவுடன் 139 பந்துகளில் 101 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தார்.
எனினும் மத்திய வரிசையில் நிலக்ஷிகா சில்வா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி இலங்கை சார்பாக உலகக் கிண்ணத்தில் குவித்த அதிவேக அரைச் சதமே அவரது அணியை சிறந்த நிலையில் இட்டது.
அவர் 26 பந்துகளில் அரைச் சதத்தைப் பூர்த்தி செய்ததுடன் மொத்தமாக 28 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட ஆட்டம் இழக்காமல் 55 ஓட்டங்களைக் குவித்தார்.
முன்னதாக சமரி அத்தபத்து 53 ஓட்டங்களையும் விஷ்மி குணரட்ன 42 ஓட்டங்களையும் ஹசினி பெரேரா 44 ஓட்டங்களையும் ஹர்ஷித்தா சமரவிக்ரம 26 ஓட்டங்களையும் பெற்றனர்.
இப் போட்டியில் நியூஸிலாந்தின் களத்தடுப்பு அவ்வளவு சிறப்பாக அமையாதது இலங்கைக்கு கைகொடுப்பதாக அமைந்தது.
பந்துவீச்சில் சொஃபி டிவைன் 54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ப்றீ இல்லிங் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். நியூஸிலாந்து இன்னும் சற்று நேரத்தில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடும்.
Image – ESPN

