பஸ் கட்டணங்களை வங்கி அட்டைகள் மூலம் செலுத்தும் நடைமுறை எதிர்வரும் திங்கட்கிழமை (24) முதல் அமுல்படுத்தப்படுவதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் தொழில்நுட்ப வழிகாட்டுதலின் கீழ் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் செயற்படுத்தப்படவுள்ள இந்த நடவடிக்கை, மாக்கும்புர பொது போக்குவரத்து நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.
முதற்கட்டத்தின் கீழ், மூன்று மாகாணங்களுக்கான போக்குவரத்து மார்க்கம் உள்ளிட்ட சுமார் 20 போக்குவரத்து மார்க்கங்களில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதன்படி, காலி, மாத்தறை மற்றும் பதுளை நோக்கிப் பயணிக்கும் பஸ்களில் பயணிகள் இந்த டிஜிட்டல் கட்டண முறையை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை பயணிகளுக்கு மீதித் தொகையை திருப்பி வழங்குவது உட்பட்ட விடயங்களில் உறுதுணையாக அமையும் என்றும் அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

