இயக்குநர் இளன் நாயகனாக மாறி புதிய படமொன்றில் நடித்து வருகிறார்.
‘பியார் பிரேமா காதல்’ மற்றும் ‘ஸ்டார்’ ஆகிய படங்களை இயக்கியவர் இளன். தற்போது புதிய படமொன்றில் நாயகனாக நடித்து வருகிறார். இதனை அவரே இயக்கியும் வருவது குறிப்பிடத்தக்கது. இதன் படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
இளன் இயக்கிய ‘ஸ்டார்’ படத்தினை தயாரித்த தயாரிப்பு நிறுவனமே, இந்த புதிய படத்தினையும் தயாரித்து வருவதாக கூறப்படுகிறது. ‘ஸ்டார்’ படத்துக்குப் பிறகு தனுஷ் நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், அப்படம் அடுத்தகட்டத்துக்கு நகரவில்லை. இதனால் தானே நடித்து, இயக்கி வருகிறார் இளன்.
’பியார் பிரேமா காதல்’ மற்றும் ‘ஸ்டார்’ ஆகிய இரண்டு படங்களுமே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவை. குறிப்பாக ‘ஸ்டார்’ திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு படங்களுக்கும் யுவன் தான் இசையமைத்திருந்தார்.