கூடைப்பந்து விளையாட்டுக் களத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள வெப் தொடர், ‘நடு சென்டர்’. இதில் விஜய் சேதுபதி மகன் சூர்யா, சூர்யா எஸ்.கே, சாரா பிளாக், டெரன்ஸ், முகேஷ், டோம், யஷ்வந்த், சஹானா, மதுவசந்த், ஆஷா சரத் ஆகியோருடன் சசிகுமார், கலையரசன் நடித்துள்ளனர். இதை, நரு நாராயணன் இயக்கியுள்ளார். ஹெஸ்டின் ஒளிப்பதிவு செய்துள்ள இத்தொடருக்கு விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார்.
தேசிய அளவிலான கூடைப்பந்து வீரரான 17 வயது பிகே, தவறான நடத்தைக்காக பள்ளியில் இருந்து வெளியேற்றப் படுகிறான். ஒரு மோசமான பள்ளிக்கு மாற்றப்பட்டு அங்கு பொருந்த போராடுகிறான். அப்போது அவனுக்குள் இருக்கும் திறமையைக் கண்டறிந்து பள்ளி துணை முதல்வர் ஊக்குவிக்க, அவன் வாழ்வு மாறத் தொடங்குகிறது. அவன் எப்படி முன்னேறுகிறான் என்பது கதை.
இயக்குநர் நரு நாராயணன் கூறும்போது, “இது உயர் நிலைப்பள்ளி ஒன்றின் கூடைப்பந்து அணியை பற்றிய கதை என்றாலும் அதைச் சுற்றி மட்டுமே நகராது. அதையும் தாண்டி அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் வாழ்க்கை முறையையும் பேசுகிறது. தொடரில் பயிற்சியாளராக சசிகுமார் நடித்துள்ளார். இந்தத் தொடரை ஆத்மார்த்தமாகவும் மகிழ்ச்சியுடனும் உருவாக்கியுள்ளோம்” என்றார். இத்தொடர் நவ.20-ம் தேதி ஜியோ ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.
hindutamil

