மூன்றாவது நடுவரின் தீர்ப்பை விமர்சித்து கருத்துக்களை வெளியிட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேரன் சமியிற்கு ஐசிசி இனால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. நேற்று நிறைவடைந்த இந்தத் தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 159 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியீட்டியது.
முன்னதாக இந்தப் போட்டியில் டிராவிஸ் ஹெட்டின் விக்கெட் உள்ளிட்ட நடுவர்கள் வழங்கிய சில முடிவுகள் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக அமைந்தன. இது கிரிக்கெட் உலகில் பேசு பொருளானது. குறிப்பாக, அந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக மூன்றாவது நடுவர் அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக் நான்கு தவறான முடிவுகளை வழங்கியிருந்தார்.
போட்டியின் முதல் நாளில் அரைச் சதமடித்த டிராவிஸ் ஹெட் கொடுத்த பிடியெடுப்பை ஷாய் ஹோப் நன்றாகப் பிடித்தார். ஆனால் 3ஆவது நடுவர் ஆண்ட்ரியன் ஹோல்ட்ஸ்டாக் அதற்கு எந்தவித உறுதியாக பதிவுகளும் இல்லை எனக்கூறி அதை ஆட்டமிழப்பு அல்ல அறிவித்தது சர்ச்சையை உண்டாக்கியது.
இரண்டாவது நாளில் பாட் கம்மின்ஸ் எதிர்கொண்ட பந்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைவர் ரோஸ்டன் சேஸ் எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அதை ரிவ்யூ செய்த போது பந்து எட்ஜ் ஆகி சென்றது நன்றாக தெரிந்தது. அதனால் தீர்ப்பை மாற்றி வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நடுவர் ஹோல்ட்ஸ்டார்க் மீண்டும் ஆட்டமிழப்பு வழங்கியது மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தியது.
3வது சர்ச்சைக்குரிய ஆட்டமிழப்பாக வெப்ஸ்டர் வீசிய பந்தில் ஷாய் ஹோப் கொடுத்த பிடியெடுப்பை அவுஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி பிடிக்கும் போது பந்து தரையில் உரசியது நன்றாக தெரிந்தது. அப்போது அது ஆட்டமிழப்பாக அறிவிக்கப்படாது என்று எதிர்பார்க்கப்பட்ட அதே நடுவர் ஹோல்ட்ஸ்டார்க் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக ஆட்டமிழப்பு வழங்கியது கிரிக்கெட் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியது.
இந்த 3ஆவது நடுவர் ஹோல்ட்ஸ்டாக் வழங்கிய தவறான ஆட்டமிழப்புகள் காரணமாக முதல் இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு 190 ஓட்டங்களை மாத்திரமே எடுக்க முடிந்தது.
இதை போட்டியின் போதே மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தவைவர் ரோஸ்டன் சேஸ் அதிருப்தி தெரிவித்திருந்தார். நடுவர்களின் முடிவுகள் வீரர்களின் இருப்பிடத்தை தீர்மானிக்கிறது. அவர்கள் தவறான முடிவை வழங்கினால் அது அவர்களுக்கு எந்த பிரச்சினையையும் கொடுக்கப்போவதில்லை. ஆனால் வீரர்கள் அணியில் இடம்பெற வேண்டுமா வேண்டாமா? என்பதை நடுவரின் முடிவுகள் தீர்மானிக்கின்றன. அதனால் தவறான முடிவுகளை வழங்கும் நடுவர்களுக்கும் தண்டணைப் புள்ளிகள் கொடுக்கப்பட வேண்டும் என்று அதிருப்தியுடன் பேசியிருந்தார்.
எது எவ்வாறாயினும், இதற்கு மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தவைவர் ரோஸ்டன் சேஸ் வெளிப்படையாக அதிருப்தியை தெரிவித்திருந்தாலும், அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேரன் சமி போட்டியின் பிறகு ஊடகவியலாளர் சந்திப்பில் மூன்றாவது நடுவரை பகிரங்கமாக கேள்வி எழுப்பினார்.
மூன்றாவது நடுவரின் தவறான முடிவுகளை விமர்சித்த சமி, ‘குறிப்பிட்ட அந்த நடுவரை நான் இங்கிலாந்தில் இருந்து பார்த்துவருகிறேன். இப்படியும் நடுவர் ஒருவர் இருப்பாரா என்ற இடத்தில் இருக்க யாரும் விரும்ப மாட்டார்கள். ஆனால் எங்களுக்கு எதிராக பல தவறான முடிவுகள் கிடைப்பதை நான் பார்க்கிறேன். இது வெறுப்பூட்டுகிறது, முடிவெடுப்பதில் நிலைத்தன்மையை மட்டுமே நான் கேட்கிறேன். ரோஸ்டன் சேஸ் விடயத்தில் பந்து துடுப்பு மட்டையில் எட்ஜ் ஆகி சென்றதை நாங்கள் பார்த்தோம்‘ என்று வெளிப்படையாக விமர்சித்தார்.
இவ்வாறு நடுவருக்கு எதிராகப் பேசுவது சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விதிப்படி தவறு எனச் சுட்டிக்காட்டி, மேற்கிந்தியத் தீவுகள் அணியின தலைமைப் பயிற்சியாளர் டேரன் சமி மீது குற்றம் சுமத்தப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் போட்டி சம்பளத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு தகுதி நீக்கப் புள்ளி (demerit point) வழங்கப்பட்டுள்ளது. கடந்த 24 மாதங்களில் இதுவே அவரது முதல் தவறு ஆகும்.
இந்தப் போடடியின் மத்தியஸ்தர் ஜவகல் ஸ்ரீநாத் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். அதை டேரன் சமி ஏற்றுக்கொண்டதால், எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. அவருக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையை பேசியதற்காக டேரன் சமிக்குத் தண்டனை அளிப்பதா என கிரிக்கெட் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.