இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கெப்டன் மகேந்திர சிங் தோனி அதிகாரப்பூர்வமாக ட்ரோன் பைலட் உரிமம் பெற்று அசத்தியுள்ளார். தோனி தனது சமூக வலைதள பதிவில் இதை அறிவித்துள்ளார்.
சென்னையிலுள்ள, கருடா ஏரோஸ்பேஸ் என்ற சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தால் (DGCA) அங்கீகரிக்கப்பட்ட ரிமோட் பைலட் பயிற்சி நிறுவனத்தில் தோனி பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளார்.
அவர் இந்த நிறுவனத்தில் முதலீட்டாளர் மற்றும் பிராண்ட் அம்பாசிடரும் ஆவார்.
கருடா ஏரோஸ்பேஸ், உற்பத்தி மற்றும் பயிற்சி ஆகிய இரண்டிற்குமே DGCA சான்றிதழ்களைப் பெற்ற இந்தியாவின் முதல் ட்ரோன் ஸ்டார்ட்அப் ஆகும்.
தோனி பயிற்சி மேற்கொண்டது குறித்து கருடா ஏரோஸ்பேஸின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அக்னிஸ்வர் ஜெயப்பிரகாஷ் கூறுகையில், “எங்கள் பிராண்ட் அம்பாசிடரும் முதலீட்டாளருமான எம்.எஸ். தோனி, தனிப்பட்ட முறையில் பயிற்சியை மேற்கொண்டு பைலட்டாக சான்றிதழ் பெற்றது எங்களுக்கு ஒரு மகத்தான மைல்கல்.
அவர் மிகுந்த கவனம் செலுத்தி மிக விரைவாக அதைக் கற்றுக்கொண்டார். ட்ரோன் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் எங்கள் நோக்கத்தில் அவர் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை, எங்கள் முழு அணிக்கும் ஒரு பெரிய ஊக்கமளிக்கிறது. தோனி பாய் ஒரு உத்வேகம்” என்று தெரிவித்தார்.

