தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரத்தில் தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் அனைத்தும் வெறும் ‘பொய் நாடகம்’ என்றும், இதில் எழுத்துப்பூர்வமான எந்தவொரு உறுதிப்பாடும் இல்லை என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிச் செயலாளர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படுவதாகக் கூறப்படும் சம்பள அதிகரிப்பு தொடர்பாக தோட்ட நிறுவனங்களிடம் இருந்து முறையான சட்ட ரீதியான உடன்படிக்கைகள் எதுவும் எட்டப்படவில்லை எனச் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்து வரும் கருத்துக்களை வழிமொழிந்த ஹரின் பெர்னாண்டோ,தோட்டத் துறை சார்ந்த அனுபவம் கொண்ட ஜீவன் தொண்டமான் கூறுவது போல, இந்தச் சம்பள அதிகரிப்பில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதை உறுதிப்படுத்தினார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் வேண்டுகோளுக்கு இணங்க, ஒரு புரிந்துணர்வின் அடிப்படையிலேயே தோட்ட நிறுவனங்கள் இந்தச் சம்பள அதிகரிப்பை வழங்க முன்வந்துள்ளனவே தவிர, இது நிலையான ஒன்றல்ல எனக் குறிப்பிட்டார்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியிலும் இவ்வாறான கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும், அவர் குறுகிய காலமே பதவியில் இருப்பார் என்ற கணிப்பில் நிறுவனங்கள் அதற்கு இணங்கவில்லை என்றும், தற்போது அநுரகுமார திஸாநாயக்க அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஜனாதிபதியாக இருப்பார் என்பதால் தற்காலிகமாக இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றும் அவர் விவரித்தார்.
மேலும், ஒரு காலத்தில் 3 இலட்சமாக இருந்த தோட்டத் தொழிலாளர்களின் எண்ணிக்கை தற்போது 60 ஆயிரமாகக் குறைந்திருப்பதையும், தொழிற்சங்கங்களின் பலம் வீழ்ச்சியடைந்துள்ளதையும் சுட்டிக்காட்டிய அவர், இந்தத் துறையைப் பாதுகாப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார்.
அரசாங்கம் இதுவரை கூறி வந்த ஏனைய பொய்ப் பிரச்சாரங்களைப் போலவே, இந்தச் சம்பள அதிகரிப்பு விவகாரமும் இன்னும் சில மாதங்களில் சமூக மயமாகும்போது, அது ஒரு வெறும் அரசியல் நாடகம் என்பது நாட்டு மக்களுக்குத் தெளிவாகத் தெரியவரும் என அவர் தனது உரையில் மேலும் தெரிவித்தார்.
thamilan

