இந்த ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது கேட் கலெக்ஷனை முன்னிறுத்தி செய்யப்பட்ட ஏற்பாடு என்று தெரிகிறது.
சமீபத்தில் சாம்பியன்ஸ் கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள், பாகிஸ்தானுடன் ஆட மாட்டோம் என்று புறக்கணித்தனர். அதேபோல் ஆசியக் கோப்பையையும் புறக்கணிக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்தாலும், அப்படி எதுவும் நடக்காது என்பதை பிசிசிஐ உறுதி செய்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுவதை அடுத்து பிசிசிஐ ஒப்புக் கொண்டது.
ஒரே பிரிவில் இந்தியா – பாகிஸ்தான் இருப்பதால் ஆசியக் கோப்பையில் இரு அணிகளும் 3 முறை மோதும் வாய்ப்பு உள்ளது. கலெக்ஷனை அள்ளலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிசிசிஐ-யின் இரட்டை நிலைப்பாட்டைக் கேள்விக்குட்படுத்தியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் லெக் ஸ்பின்னர் டேனிஷ் கனேரியா. அதேபோல் உங்களுக்குகு சவுகரியப்படும்போது ‘தேசப்பற்று’ என்ற துருப்புச் சீட்டைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்றும் பிசிசிஐ-யைக் கண்டித்துள்ளார்.
அவர் தன் எக்ஸ் தள பக்கத்தில், “இந்திய வீரர்கள் உலக சாம்பியன்ஸ் லீக் தொடரில் பாகிஸ்தான் போட்டியைப் புறக்கணித்தனர். அதைத் தேசியக் கடமை என்று வர்ணித்தனர். இப்போது பாகிஸ்தானுடன் ஆசியக் கோப்பைப் போட்டியில் ஆடுவது நன்றாக உள்ளதா?
பாகிஸ்தானுடன் இதில் ஆடலாம் என்றால், சாம்பியன்ஸ் தொடரிலும் ஆடியிருக்க வேண்டுமே. எனவே, உங்களுக்குத் தேவைப்படும் போது தேசப்பற்றைப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள். விளையாட்டு விளையாட்டாகவே இருக்கட்டும் பிரச்சாரமாக வேண்டாம்” என்று பிசிசிஐ-யை விமர்சனம் செய்துள்ளார். செப்டம்பர் 14-ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெறுகிறது.