கொழும்பில் இருந்து மும்பைக்கு வந்து கொண்டிருந்த சிங்கப்பூர் கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அதில் இருந்த 22 பணியாளர்களில் 18 பேரை இந்திய கடற்படை மீட்டுள்ளது.
சிங்கப்பூர் கொடியுடன் கூடிய கொள்கலன் கப்பலான எம்வி வான் ஹை 503, கொழும்பில் இருந்து புறப்பட்டு மும்பைக்குச் சென்று கொண்டிருந்தது.
இந்த கப்பல் நேற்று கேரளாவின் பேப்பூர் கடற்கரையில் இருந்து சுமார் 78 கடல் மைல் தொலைவில் இருந்தபோது திடீரென தீ பிடித்துள்ளது.
இது குறித்த தகவல் இந்திய கடற்படைக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, ஐஎன்எஸ் சூரத் கப்பல் சம்பவ இடத்துக்கு விரைந்தது. கப்பலில் இருந்த 22 பணியாளர்களில் 4 பேர் கடலில் காணாமல் போன நிலையில், மீதமுள்ள 18 பேரை மீட்டு நேற்று இரவு 10.45 மணிக்கு நியூ மங்களூர் துறைமுகத்தை வந்தடைந்தது.
மீட்கப்பட்டவர்களில், எட்டு பேர் சீனர்கள், நான்கு பேர் தைவான் நாட்டினர், நான்கு பேர் மியன்மாரை சேர்ந்தவர்கள் மற்றும் இரண்டு பேர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள்.