யாழ். தையிட்டு திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தியும், விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்குமாறு வலியுறுத்தியும் இன்று இரண்டாவது நாளாகவும் போராட்டம் இடம்பெற்றது.
பொசன் பௌர்ணமியை முன்னிட்டு திஸ்ஸ விகாரையில் இன்று வழிபாடு நடைபெற்றது. தென்னிலங்கையில் இருந்து நபர்கள் அழைத்துவரப்பட்டிருந்தனர்.
இதன் பின்னணியில் கடும் போக்குடைய சிங்கள, இனவாத அமைப்புகள் இருப்பதாக தமிழ் சிவில் செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்நிலையில் தையிட்டி விகாரை பகுதியில் குழப்பமான சூழல் உருவாகலாம் என்ற முன்னெச்சரிக்கையின் அடிப்படையில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
நீர்த்தாரைப் பிரயோக வாகனமும் கொண்டுவரப்பட்டிருந்தது. விசேட அதிரடிப்படையினர் மற்றும் புலனாய்வு பிரிவினரும் அங்கிருந்துள்ளனர்.
தையிட்டியில் தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையை அகற்ற கோரி காணி உரிமையாளர்கள் , மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இன்று மாலைவரை அப்போராட்டம் தொடரவுள்ளது. போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து, ஐக்கிய சோஷலிசக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி சிறிநாத் பெரேரா, தையிட்டிக்கு சென்றிருந்தார்.
குறித்த விகாரை அகற்றப்பட வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை நியாயமானது என அவர் கருத்து வெளியிட்டார். அத்துடன், இவ்வாறான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் சிறிநாத் பெரேரா வலியுறுத்தினார்.
அதேவேளை, போராட்டத்தை ஒடுக்குவதற்காக படையினர் குவிக்கப்பட்டனர் என சுட்டிக்காட்டி, அதற்கு கடும் எதிர்ப்பை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் வெளியிட்டார்.