7.4 C
Scarborough

தியாக தீபத்துக்கு தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் உணர்வுப்பூர்வமாக நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

Must read

தியாக தீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று உணர்வுப்பூர்வமாக அனுஷ் டிக்கப்பட்டது.

தாயகத்தில் பிரதான நினைவேந்தல் நிகழ்வு யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவுத்தூபியில் இன்று முற்பகல் 10.48 மணிக்கு நடைபெற்றது. ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, தொடர்ந்து அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

யாழ். பல்கலைக்கழகம் உட்பட ஏனைய சில இடங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

அதேபோல யாழ். வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் “தியாக தீபம்” திலீபனின் நினைவு தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டதுடன் திலீபனின் தியாகத்திற்கு மதிப்பளிக்கும் விதமாக தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டன.

விடுதலைப் போராட்ட வரலாற்றில் தம் இன்னுயிரைத் தியாகம் செய்த மாவீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அவ்வேளை அஞ்சலிச்சுடரினை பிரதேச சபையின் உறுப்பினர் விஜயதாரணி ஏற்றிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. பின், தவிசாளரினால் அஞ்சலி உரை நிகழ்த்தப்பட்டது. சபை உறுப்பினர்களும் தமது அஞ்சலியினை சமர்ப்பித்தனர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பிரதேச சபையின் அவை அமர்வில் திலீபனை நினைவுகூர்ந்து முன்னைய காலங்களில் “திலீபன் வீதி” என பிரயோகிக்கப்பட்டு, பின்னர் பொக்கணை வீதி என அழைக்கப்பட்ட வீதியை புனரமைக்கவும் அவ்வீதியின் பெயரை நிர்வாக நடைமுறைகளுக்கு அமைய, “திலீபன் வீதி” என மீளவும் மாற்றியமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, “தியாக தீபம்” திலீபன் அவர்கள் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட கிராமத்தினைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை வளாகத்தில் திலிபனுக்கு திருவுருவச்சிலையினை 1975ஆம் ஆண்டின் 4 இலக்க காட்சிப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம், உள்ளாட்சி சபை அமைச்சரின் அனுமதியைப் பெற்று நிறுவுவதெனவும் தவிசாளர் தியாகராஜா நிரோஷினால் அவைத் தீர்மானத்திற்காக முன்வைக்கப்பட்டது. இத்தீர்மானங்கள் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.

தியாக தீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஆஸ்திரேலியாவில் சிட்டி, மெல்பேர்ண், அடிலெய்ட் , பேர்த் உட்பட மேலும் சில நகரங்களில் உணர்வுப்பூர்வமாக நடைபெற்றன.

ஏதிலிகள் செயற்பட்டாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், புலம்பெயர் தமிழர்கள் மற்றும் ஆஸ்திரேலிய அரசியல் பிரமுகர்கள் நிகழ்வுகளில் பங்கேற்று, வீரவணக்கம் செலுத்தினர். கனடாவிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இராசையா பார்த்தீபன் என்ற இயற்பெயரை கொண்ட திலீபன் 1963ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் திகதி யாழ்ப்பாணம் – ஊரெழுவில் பிறந்தவர். தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் தீவிரமடைந்தபோது தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்தார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த அவர், இந்திய அமைதிப் படை நாட்டில் நிலைகொண்டிருந்தபோது, 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தார்.

மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும், கிழக்கிலும் புதிதாகத் திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்,

சிறைக் கூடங்களிலும் இராணுவ – பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்,

அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்,

ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும்,

தமிழர் பிரதேசங்களில் புதிதாகப் பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும் என 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி உணவு – நீரைத் தவிர்த்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.

இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில், 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி முற்பகல் 10.48 மணிக்கு அவர் உயிர்நீத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article