தாய்லாந்து நாட்டில் அரிய வகை குரங்கு குட்டிகளைக் கடத்திய நபரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சர்வதேச ரீதியில் இடம்பெறும் வனவிலங்கு கடத்தல் தொடர்பில் ஐ.நா.வின் போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு மற்றும் அமெரிக்க மீன் வளம், வனவிலங்கு துறை அதிகாரிகள் ஆகியோருடன் இணைந்து தாய்லாந்து பொலிஸார் விசாரணையினை முன்னெடுத்தனர்.
அதன் அடிப்படையில், பேங்கொக்கிலுள்ள பெற்றோல் நிலையமொன்றில் நேற்று முன்தினம் ( 14) மாலையில், வனவிலங்குகளை வாடிக்கையாளரிடம் கையளிக்க வந்த சுமார் 47 வயது மதிக்கத்தக்க நபரொருவரை பொலிஸார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.
அந்நபர் கைது செய்யப்படும் போது, அவரிடமிருந்து ஒரு வயதும் ஒரு மாதமும் நிறைவுற்ற இரண்டு அரிய வகை ஒராங்குட்டான் இன குரங்கு குட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அந்நபர் இக்குரங்கு குட்டிகளை குழந்தைகள் அணியும் டையப்பரை அணிவித்து பிளாஸ்ரிக் கூடையில் கடத்தி வந்துள்ளமை தெரிய வந்துள்ளது.
இவ்வகை குரங்குகள் போர்னியோ மற்றும் சுமத்ரா தீவுகளைப் பூர்வீகமாகக் கொண்டவை. அவை அழிவின் விளிம்பில் உள்ளவை. அதனால் சர்வதேச அளவில் இக்குரங்குகள் பாதுகாக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தில் இவ்வகை குரங்குகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தாய்லாந்து அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த திடீர் சுற்றி வளைப்பின் ஊடாக மீட்கப்பட்ட இக்குரங்கு குட்டிகள் தேசியப் பூங்கா, வனவிலங்கு மற்றும் தாவர பாதுகாப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.