ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின்பொழுது மாகாணசபை முறைமைகள் பாதுகாக்கப்படும் என்று கூறிய அநுர (Anura Kumara) அரசு இன்று அவற்றை நிகாரிக்கின்ற போக்கைக் கொண்டிருப்பதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி மற்றும் தேசிய மக்கள் சக்தியினர் மாகாணசபை தொடர்பாக அண்மையில் வெளிப்படுத்திவரும் கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையில் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் ”ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின்பொழுது மாகாணசபை முறைமைகள் பாதுகாக்கப்படும் என்றும் அதற்கான தேர்தல் விரைவாக நடத்தப்படும் என்றும் அதிலுள்ள அதிகாரங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதியினாலும் அவருடன் இருக்கக்கூடிய ஏனைய கட்சி உறுப்பினர்களாலும் பிரசாரம் செய்யப்பட்டது.
வேறுபல உறுதிமொழிகள் கொடுக்கப்பட்டிருந்தாலும் மேற்கண்ட உறுதிமொழியானது முக்கியத்துவமானது. புதிதாக வந்திருக்க்கூடிய அநுர அரசாங்கமானது இனவாதம் மதவாதம் போன்றவற்றிற்கு இந்த நாட்டில் இடமில்லை என்று கூறுகின்றது.
அநுர அரசாங்கமும் ஜேவிபியும் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து ஆட்சி பீடமேறிய அனைத்து அரசாங்கங்களும் பல்வேறுபட்ட வழிமுறைகளில் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி வந்தனர்.
இதன்காரணமாக அன்றிலிருந்து இன்றுவரை மாறிமாறி வந்த அரசாங்கங்களின் தமிழர் விரோத கொள்கைகளிலிருந்து தமிழ் மக்கள் தம்மை தற்காத்துக்கொள்ள இவற்றிற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய நிலையும் போராட வேண்டிய நிலையும் ஏற்பட்டது.
எனவே, தம்மைத் தற்காத்துக்கொள்ள அவர்கள் எடுக்கும் முயற்சிகள் இனவாதம் ஆகாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.