6.6 C
Scarborough

“தமிழ் சினிமாவின் பெரும் நம்பிக்கையாக துருவ் இருப்பார்” – இயக்குநர் மாரி செல்வராஜ்

Must read

மாமன்னன்’ படத்திற்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்கும் படம் ‘பைசன் காளமாடன்’. இப்படத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, கலையரசன், ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தீபாவளி வெளியீடாக இந்தப் படம் வெளியாகிறது.

இந்த படத்தின் இசையமைப்பாளராக நிவாஸ் கே.பிரசன்னா, ஒளிப்பதிவாளராக எழில் அரசு ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

இந்தப் படம் குறித்து இயக்குநர் மாரிசெல்வராஜ் கூறியதாவது: ‘பைசன்’ என் கரியரில் முக்கியமான படம் . மிகவும் கனமான, சிக்கலான ஒரு கதையை சொல்லியிருக்கிறேன்.

இந்த கதையை சொல்ல முயற்சிக்கும்போது ஒரு பக்குவத்தை இந்த கதையே எனக்கு கொடுத்தது. இதில் கபடி வீரர் மணத்தி கணேசன் கதையும் இருக்கிறது. என் கதையும் இருக்கிறது. பதற்றமான தென் தமிழகத்து இளைஞர்கள் பலபேரின் கதையும் இருக்கிறது.

இந்தபடத்திற்காக தன்னை என்னிடம் ஒப்படைத்த துருவ் விக்ரம், தயாரித்த பா.ரஞ்சித், நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

இந்தக்கதையை அவ்வளவு எளிதாக ரெகுலர் சினிமா சூட்டிங் மாதிரி பண்ணிவிடமுடியாது. ஒருவருடம் பயிற்சி செய்து முழு கபடி வீரராக, தென் தமிழகத்து கிராமத்து இளைஞனாக மாற கடுமையான உடல் உழைப்பும் தேவைப்பட்டது. படம் துவங்கி கொஞ்ச நாளில் துருவால் முடியவில்லை.ரொம்ப கஷடப்பட்டான். வேறு கதை பண்ணிடலாமா என்று அவனிடம் கேட்டேன்.

“இல்லை கஷடமாகத்தான் இருக்கு. நீங்களும் இந்த படம் பண்ணனும்னு வெறியா இருக்கீங்க. உங்களுக்கு கனவுப்படம்னு தெரியுது. நான் உங்களை அப்பா மாதிரி நினைச்சுகிட்டு வரேன். நீங்க என்ன பார்த்துப்பீங்கன்னு நம்புறேன்” என்று சொன்னான். அந்த வார்த்தைகள் என்னை அசைத்துப் பார்த்துவிட்டன.

அவனுக்கு எதுவும் நடந்துவிடாமல் பத்திரமாக பார்த்துக் கொண்டேன்.நான் மற்றபடங்களை விட அதிகபட்சமான உழைப்பை போட்டேன். எல்லாத்தையும் நான் நல்லபடியாக செய்துமுடிப்பேன் என்று நம்பினான். மொத்த குடும்பமும் நம்பியது.

எல்லா நடிகர்களும் இதை செய்யமாட்டாங்க. இரண்டு வருடங்கள் பயிற்சி எடுத்து, படப்பிடிப்புக்காக நிறைய நாட்கள் ஒதுக்கி முழுமையாக அர்பணித்திருக்கிறார் துருவ். படம் பார்த்தால் இதன் அசல் தன்மை தெரியும்.

என் நலன்விரும்பிகள் எல்லோரும் படத்தை பார்த்துவிட்டு “நீ சாதிச்சிட்ட, நினைச்சதை அடைஞ்சிட்டன்னு” சொன்னாங்க தமிழ் சினிமாவின் பெரும் நம்பிக்கையாக துருவ் இருப்பார் என்றும் அவரின் சினிமா ஆரம்பமாகிவிட்டது என்றும் ஒவ்வொருவரும் தனித்தனியாக என்னிடம் சொன்னார்கள். அதை கேட்ட எனக்கும் துருவுக்கும் பெரும் மகிழ்ச்சி. அதையே மக்கள் சொல்லும் நாளுக்காக காத்திருக்கிறேன்” என்றார் மாரிசெல்வராஜ்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article