16.1 C
Scarborough

தமிழ்க் கட்சிகள் புதியதொரு கட்டமைப்பை உருவாக்கி அதிகாரப்பகிர்வு தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் -சீ.வி.விக்னேஸ்வரன்

Must read

தமிழ்த் தேசிய கட்சிகள் ஒரு பொதுவான அரசியல் குறிக்கோளை முன்வைக்க வேண்டும் என வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கானது இலங்கையின் ஒரு அம்சமாகத் தொடர்ந்து இருப்பதே அதன் பாதுகாப்புக்கும் வருங்கால வாழ்க்கைக்கும் உசிதமானது எனத் தெரிவித்துள்ளார்.

இந்த விடயங்களை உள்ளடக்கி சீ.வி விக்னேஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது..

“தற்போது எல்லோரதும் குறிக்கோள் முழுமையான அதிகாரப் பகிர்வு வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதேயாகும்.

அதற்கு மேல் வெளிப்படையாக நாம் சிந்திக்கத் தலைப்பட்டால் சட்டத்துடன் போராட வேண்டி வரும். ஏற்கனவே சட்டத்துடன் போராடி ஆயுதங்கள் மௌனித்திருக்கும் நிலையை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

அந்த அடிப்படையில் புதியதொரு கூட்டமைப்பை சகல தமிழ்த் தேசியக் கட்சிகளையும் உள்ளடக்கி உருவாக்குவது கடினமில்லை. ஆனால் அதில் உள்ள சிக்கல் என்னவென்றால் இதுவரை காலமும் பல தமிழ்த் தேசியக் கட்சிகளை வழிநடத்தி வரும் தலைமைத்துவங்கள் மக்களின் சந்தேகத்திற்கும் வெறுப்புக்கும் ஆளாகியுள்ளார்கள்.

அவர்கள் மக்களுக்குப் போராடுவதாகக் கூறி தமது சுயநலத்துக்காகவே அரசியல் செய்து வந்துள்ளார்கள் என்று மக்கள் நம்புகின்றார்கள். கடைசியாக நடந்த தேர்தல்கள் தமிழ் மக்களின் இந்த மனோநிலையை ஒருவாறு பிரதிபலிக்கின்றது.

ஆகவே தமிழ்த் தேசியக் கட்சிகள் அனுபவமுள்ள படித்த பண்புள்ள சுயநலமற்ற பிரதிநிதிகளை ஒரு புதிய கூட்டமைப்பில் இடம்பெற வழிவகுக்க வேண்டும். 2001 ஆம் ஆண்டு ஒக்டோபரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகிய போது பல சிக்கல்கள் இருந்தன.

பின்னணியில் புலிகளின் ஆயுத பலம் இருந்தது. இன்று அவ்வாறான நிலை இல்லை. தமிழ் மக்களின் வருங்காலத் தொடர் வாழ்க்கைக்கு எவ்வாறு, முழு அதிகாரப் பகிர்வு தேவையாக உள்ளது என்பதைப் புதிதாக இயற்றப்படும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் கைசுட்டும் அமைப்பானது சட்ட ரீதியாக, தர்க்க ரீதியாக, அனுபவ ரீதியாக அரசாங்க அதிகார வர்க்கத்தினருடன் பேசி ஒரு தீர்வைப் பெறக் கூடியதாக அமைய வேண்டும்.

உணர்ச்சிகளுக்கும் சுயலாபத்துக்கும் இடங்கொடுக்காது தமிழ் மக்களின் வருங்காலம் கருதி அறிவு பூர்வமாகப் பேச்சுக்கள் அமைய வேண்டும். ஒவ்வொரு கட்சியும் மூன்றுக்குக் கூடாமல் தமது பிரதிநிதிகளை உடனே சிபாரிசு செய்ய வேண்டும்.

இவர்கள் சேர்ந்து ஒரு தவிசாளரை தம்முள் இருந்து நியமிக்க வேண்டும். இக் குழு, கட்சிகளின் சார்பில் அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடவேண்டும். பிரதிநிதிகள் அரசியல்வாதிகள் அல்லாதபடியால் அரசாங்கமும் விடயம் அறிந்த உறுப்பினர்களை அல்லது அலுவலர்களை நியமிப்பார்கள்.

அவர்கள் சேர்ந்து தரும் முடிவு பின்னர் அனைத்து கட்சிகளாலும் பரிசீலிக்கப்படும். தமிழ் மக்களுக்கு எவ்வாறான அதிகாரப் பகிர்வு தரப்பட வேண்டும் என்று அரசாங்கம் எல்லாக் கட்சிகளுடனும் சேர்ந்து தீர்மானிக்கலாம். அதற்கான ஆரம்ப வேலைகளை எமது பல்கலைக்கழக அறிவிற் சிறந்த ஆன்றோர் தொடங்க வேண்டும். வேண்டுமெனில் எமது வெளிநாட்டுத் தமிழ் அரசியல் நிபுணர்கள் எம்முடன் பேச்சுக்களில் கலந்து கொள்ள வேண்டும்“ என்று சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article