13.5 C
Scarborough

தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்

Must read

“நாங்கள் ஒன்றிணைந்தால் தாங்கள் எங்களோடு நிற்பார்கள் என்பதைத் தேர்தல் மூலம் மக்கள் சொல்லியிருக்கிறார்கள். எனவே, இனியாவது ஒன்றுபட வேண்டும்.”

– இவ்வாறு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் அவரது அலுவலகத்தில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது தேசிய மக்கள் சக்தி மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்திருப்பதாகத் தெரிகின்றது. வடக்கு – கிழக்கிலும் அந்த அலை பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலை உள்ளது. மக்களின் எதிர்பார்ப்பை இந்த அரசு தீர்க்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்குக் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

ஜனாதிபதியின் அக்கிராசன உரையில் தேசிய இனப் பிரச்சனை தொடர்பாக பேசாமை வருத்தமளிக்கின்றது. விவசாயிகள், கடற்றொழிலாளிகள், ஏழை மக்களின் பொருளாதாரம் தொடர்பாக அவரால் சொல்லப்பட்ட கருத்தை வரவேற்கின்றேன். அனைவரும் இலங்கையர்கள் என்ற அடிப்படையிலேயே அவரது செயற்பாடு இருக்கின்றது.

எங்களைப் பொறுத்த வரை நாம் பல விலைகளைக் கொடுத்திருக்கின்றோம். எனவே, இனப் பிரச்சினை விடயத்தில் அரசு என்ன நிலைப்பாட்டில் உள்ளது என்பதைத் தெளிவாகக் கூறவேண்டும்.

புதிய அரசமைப்பு உருவாக்கப்படும்போது 13 ஆவது திருத்தமும் இல்லாமல் செய்யப்படும் என்ற நிலை வரலாம் எனக் கூறப்படுகின்றது. எனவே, நல்ல விடயங்களை ஆதரிப்போம். மக்களுக்கு அநீதி இழைக்கப்படும் நிலை தொடர்ந்தால் அதனை நாம் கடுமையாக எதிர்ப்போம்.

நாங்கள் ஒற்றுமையாக இருந்திருந்தால் இந்த ஆசனங்கள் தேசிய மக்கள் சக்திக்குச் சென்றிருக்காது. தமிழ்க் கட்சிகளுக்கு விழுந்த வாக்குகளைப் பார்த்தால் அது புலப்படும். நாடாளுமன்றத்தில் தனித்தனியாக நாங்கள் செயற்பட முடியாது என்பது எனது கருத்து. பொதுவான விடயத்தில் ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும். அதன் மூலமே பல விடயங்களை நாம் சாதிக்க முடியும்.

நாங்கள் ஒன்றிணைந்தால் தாங்கள் எங்களோடு நிற்பார்கள் என்பதைத் தேர்தல் மூலம் மக்கள் சொல்லியிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் டக்ளஸ் மற்றும் அங்கயன் ஆகியோரது வாக்குகளே தேசிய மக்கள் சக்திக்குச் சென்றுள்ளன. தேசியத்தை நேசிக்கின்ற மக்களின் வாக்குகள் அவர்களுக்கு செல்லவில்லை.

எனவே, இனிவரும் காலங்களிலும் நாங்கள் ஒன்றிணையவில்லையெனில், வடக்கு – கிழக்கில் அரசு ஆளும் சந்தர்ப்பத்தை உருவாக்கிய தவறை நாங்கள் விட்டவர்களாக இருக்கப் போகின்றோம்.

அந்த நிலையை மாற்றி இனியாவது ஒன்றாகச் செயற்பட வேண்டும். நான் அதில் முனைப்புக் காட்டுகின்ற ஒருவன். மக்களும் அதையே எதிர்பார்க்கின்றனர்.” – என்றார்.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article