டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், 2022ஆம் ஆண்டில், சமூக ஊடகமான ட்விட்டர் செயலியை (தற்போது எக்ஸ் தளம்) வாங்கப்போவதாக அறிவித்தார். இதனையடுத்து, ட்விட்டர் செயலியின் பங்கு மதிப்பு 27 சதவிகிதத்துக்கும் மேல் உயர்ந்தது. ஆனால், அதற்கு முன்பாகவே, ட்விட்டரின் 5 சதவிகிதப் பங்குகளை எலான் மஸ்க் வாங்கியிருந்தார்.
அமெரிக்க சட்டத்தின்படி, ஒரு நிறுவனத்தின் பங்கை ஒருவர் வாங்கினாலோ வைத்திருந்தாலோ, அதுகுறித்த தகவலை 10 நாட்களுக்குள் சட்டபூர்வமாகத் தெரிவிக்க வேண்டும்.
ஆனால் எலான் மஸ்க் ட்விட்டரின் பங்குகளை வாங்கிய 11 நாட்களுக்குப் பின்னர்தான் அதனை அறிவித்தார். இந்தத் தாமதமான அறிவிப்பால் 150 மில்லியன் டொலர் குறைவாகச் செலுத்தி, குறைந்த விலையில் ட்விட்டர் செயலியை வாங்க வழிவகுத்தது. இருப்பினும், ட்விட்டரின் பங்குகளை வைத்திருந்த மற்றவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம் என்று அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (எஸ்.இ.சி.) கூறியது.
இதனைத் தொடர்ந்து, எலான் மஸ்க்கின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதன்படி எலான் மஸ்க் பெற்ற தொகையைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும், கூடுதல் அபராதமும் செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த வழக்கில் அபராதம் மட்டுமே அவருக்கு விதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.