14.9 C
Scarborough

ட்ரம்ப் பதவியேற்ற 100 நாட்களில் 140 உத்தரவுகள்!

Must read

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆகின்றன.

ட்ரம்பின் இரண்டாவது பதவிக் காலத்தில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் பல அதிரடி மாற்றங்களை உலகம் கண்டது. பல விடயங்கள் சர்ச்சைக்குரியதாக மாறி நீதிமன்றம் சென்றன. இந்த குறுகிய காலத்தில் ட்ரம்பிற்கு எதிராக 200க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வெறும் 100 நாட்களில், ட்ரம்ப் 140 நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அவற்றில் 36 ஒப்பந்தங்கள் முதல் வாரத்திலேயே கையெழுத்திடப்பட்டன. அதே நேரத்தில் ஜோ பைடன், தனது நான்கு ஆண்டுகால பதவிக்காலத்தில் கையெழுத்திட்ட மொத்த நிர்வாக உத்தரவுகளின் எண்ணிக்கை வெறும் 162 மட்டுமே.

ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றது முதல் மெக்சிக்கோ எல்லையில் 2,500 தேசிய காவல்படை உறுப்பினர்களுடன் 1,500 வீரர்கள் நிறுத்தப்பட்டனர். கிரீன்லாந்து மற்றும் பனாமா கால்வாய் இணைக்கப்படும் என்றும் கனடா அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாறக்கூடும் என்றும் அவர் அறிவித்தார்.

இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது பரஸ்பரம் என்ற பெயரில் பழிவாங்கும் வரிகளை விதிப்பதன் மூலம் ட்ரம்ப் சர்வதேச வர்த்தகப் போரை தொடங்கினார். எதிர்த்து நின்ற சீனா மீது 245 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகள் மீதான வரி 90 நாட்களுக்கு தாற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் மீதான நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியர்கள் உட்பட மக்கள் இராணுவ விமானத்தில் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். இந்திய குடிமக்கள் உட்பட அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்து வந்த 1,39,000 பேரை இதுவரை நாடு கடத்தியுள்ளதாக ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் பிறப்புரிமை குடியுரிமையை முடிவுக்குக் கொண்டுவர ஒரு நிர்வாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, ஆனால் ஒரு அமெரிக்க நீதிமன்றம் அந்த உத்தரவை அரசியலமைப்பை மீறுவதாகக் கூறி நிறுத்தி வைத்துள்ளது.

தொழிலதிபர் எலான் மஸ்க் தலைமையிலான அரச செயல்திறன் துறை, அரச ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்து வருகிறது. அரச நிறுவனங்களிலும் கிட்டத்தட்ட 60,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ட்ரம்ப் நிர்வாகம் குறைந்தது 145,000 வேலைகளை நீக்கியுள்ளது.

பலஸ்தீனியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும், காஸா கைப்பற்றப்பட்டு ஒரு ஆடம்பரக் குடியிருப்பாக மாற்றப்படும் என்றும் ட்ரம்ப் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

பலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்க மதிப்புகளுக்கு எதிரானவை என்று முத்திரை குத்தப்பட்டன. போராடுபவர்களின் விசாக்களை இரத்து செய்து நாடு கடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையில், கடந்த 2021 இல் ட்ரம்ப் வெற்றி பெறாததால் வெள்ளை மாளிகையை தாக்கிய அவரது ஆதரவாளர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.

உலக சுகாதார அமைப்பு, காலநிலை ஒப்பந்தம் ஆகியவ்ற்றில் இருந்து அமெரிக்கா விலகியது. பின்தங்கிய நாடுகளுக்கான UNWRA நிதி நிறுத்தப்பட்டது. நாட்டில் இப்போது இரண்டு வகையான மக்கள் மட்டுமே இருப்பார்கள் என கூறி திருநங்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதாக ட்ரம்ப் கூறுகிறார். 100வது நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மிச்சிகன் மாகாணத்தில் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article