அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் 25 சதவீத வாகன வரிகளுக்கு எதிராக அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீது அதே வரிகள் விதிக்கப்படும் என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். இதன்மூலம் 75 சதவீதத்திற்கும் குறைவான வட அமெரிக்க உள்ளடக்கத்துடன் தயாரிக்கப்பட்ட எந்தவொரு வாகனமும் 25 சதவீத வரிகளை எதிர்கொள்ளும். இது அமெரிக்காவிலிருந்து வரும் மொத்த கார்களிலும் அண்ணளவாக 10 சதவீதமாக இருக்கும் என கணிப்பிடப்படுகிறது.
8 பில்லியன் டொலர்கள் வரை இலாபம் ஈட்டலாம் என எதிர்பார்கப்படும் இந்த தொகை வளர்ந்து வரும் வர்த்தகப் போரால் பாதிக்கப்பட்ட கனடாவில் உள்ள வாகன உற்பத்தி தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு நேரடியாகச் செல்லும் என்று பிரதமர் கூறினார். மேலும் உலக நாடுகளுக்கு எதிரான ட்ரம்பின் ஒட்டுமொத்த வர்த்தக விரோதப் போக்கு உலகப் பொருளாதாரத்தை சிதைக்கும் எனவும் மார்க் கார்னி கூறினார்.
கனடாவில் உள்ள வாகன உற்பத்தியாளர்களுக்கு எதிர் கட்டணங்களிலிருந்து நிவாரணம் வழங்குவதற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்கி வருவதாகவும் கார்னி கூறினார்.
ட்ரம்பின் அறிவிப்பிற்கமைய வியாழக்கிழமை தொடக்கம் வாகன இறக்குமதிகள் மீதான 25 சதவீத வரிகள் தற்போது அமுலில் உள்ள கனடா உட்பட அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் அனைத்து இரும்பு மற்றும் அலுமினிய இறக்குமதிகள் மீதான 25 சதவீத வரிகளுடன் சேர்க்கப்பட்டுள்ளது.
ஆனால் CUSMA சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் வரிகளை எதிர்கொள்ளாது, இருப்பினும் அதற்கு வெளியே வரும் இறக்குமதிகள் 25 சதவீத வரிகளை எதிர்கொள்ளும் என்று வெள்ளை மாளிகையின் fact sheet இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்பின் வாகன உற்பத்தி மீதான வரிகள் நடைமுறையில் இருக்கும் வரை கனடாவில் தயாரிக்கப்பட்ட அனைத்து புதிய கார்களிலிருந்தும் GST நீக்குவதாக் கொன்சவேடிவ் தலைவர் பியர் பொலிவ்ரே உறுதியளித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட புதிய ஜனநாயக கட்சியின் (NDP) தலைவர் ஜக்மீத் சிங் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் கட்டண அச்சுறுத்தல்களுக்கு எதிராகப் போராட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.