“ பங்களாதேஷ் இடைக்கால அரசாங்கம் இந்தியாவுடன் நல்லுறவையே விரும்பியது, ஆனால் எப்போதும் ஏதோ தவறாகிவிடுகிறது” என்று அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.
லண்டனில் சாத்தம் ஹவுஸ் சிந்தனையாளர் குழுவின் இயக்குநர் பிரான்வென் மேடோக்ஸ் உடன், முகமது யூனுஸ் உரையாடினார்.
அப்போது, “பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தக் கோரி இந்தியாவுக்கு அனுப்பிய ராஜதந்திர குறிப்பை மீண்டும் நினைவூட்டுவீர்களா?” என பிரான்வென் மேடோக்ஸ் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த முகமது யூனுஸ், “அது தொடரும். முழு செயல்முறையும் மிகவும் சட்டப்பூர்வமாகவும், மிகவும் முறையாகவும் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்தியாவுடன் சிறந்த உறவை உருவாக்க விரும்புகிறோம். அது எங்கள் அண்டை நாடு. அவர்களுடன் எந்த அடிப்படை பிரச்சினையும் இருக்க நாங்கள் விரும்பவில்லை.
ஆனால் இந்திய பத்திரிகைகளில் இருந்து வரும் அனைத்து போலி செய்திகளாலும் ஒவ்வொரு முறையும் எப்படியோ விஷயங்கள் தவறாகிவிடுகின்றன. அவர்களுக்கு, உயர்மட்ட கொள்கை வகுப்பாளர்களுடன் தொடர்பு இருப்பதே இதற்குக் காரணம் என்று பலர் கூறுகிறார்கள்.” – என்று குறிப்பிட்டார்.
இதுதான் பங்களாதேஷை மிகவும் பதட்டமாகவும், மிகவும் கோபமாகவும் ஆக்குகிறது. இந்த கோபத்தை நாங்கள் சமாளிக்க முயல்கிறோம். ஆனால் சைபர்ஸ்பேஸில் தொடர்ந்து பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதிலிருந்து நாம் தப்பிக்க முடியாது. திடீரென்று அவர்கள் ஏதாவது சொல்கிறார்கள், ஏதாவது செய்கிறார்கள், கோபம் திரும்பி வருகிறது.
குறைந்தபட்சம் ஒரு அமைதியான வாழ்க்கையை உறுதி செய்வதில், இது எங்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கிறது.” என்றும் முகமது யூனுஸ் தெரிவித்தார்.
ஷேக் ஹசீனா விஷயத்தில், இந்தியாவின் பங்கு தெளிவற்றதாக இருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த முகமது யூனுஸ், “ஹசீனாவுக்கு எதிரான அனைத்து கோபமும் இப்போது இந்தியாவுக்கு எதிரானதாக மாற்றப்பட்டுள்ளது.” – என சுட்டிக்காட்டினார்.