டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவுகள் காரணமாக கண்டி மாவட்டத்தில் 241 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 68 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த அனர்த்தம் காரணமாக 114 பேர் காயமடைந்துள்ளதாக நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் இந்திக ரணவீர தெரிவித்தார்.
இந்தப் பேரிடர் காரணமாக, 1959 வீடுகள் முழுமையாகவும், 16,565 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்தன. இதன் விளைவாக, 55,804 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து எண்பத்தோராயிரத்து முந்நூற்று முப்பத்தைந்து பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, கண்டி மாவட்ட செயலகத்தில் நேற்று (23) நடைபெற்ற அனர்த்த முகாமைத்துவக் குழுக் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மக்கள் அவர்களது உறவினர்கள் வீடுகளிலும் பாதுகாப்பு மையங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய திரு. ரணவீர, கண்டி மாவட்டத்தில் 23,244 குடும்பங்கள் உறவினர்கள் வீடுகளிலும், மேலும் 2,089 குடும்பங்கள் 95 பாதுகாப்பு மையங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
மேலும், இந்த குழு கூட்டத்தில், 323 கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் 5 வயதுக்குட்பட்ட 1791 குழந்தைகள் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கண்டி மாவட்டத்தில் இயற்கை அனர்த்தத்தால் தாய்மார்களை இழந்த 7 குழந்தைகளும், தந்தையர்களை இழந்த 32 குழந்தைகளும், தாய், தந்தையர் இருவரையும் இழந்த 3 குழந்தைகளும் உள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த நிகழ்வில் கண்டி மாவட்ட மேலதிக செயலாளர் நிலுகா புலத்கே தனது கருத்துக்களைத் தெரிவித்ததுடன், வீடுகளை சுத்தம் செய்வதற்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் ரூ.25,000 கொடுப்பனவு இறுதி கட்டத்தில் இருப்பதாகக் கூறினார்.
கண்டி மாவட்ட செயலகத்தின் ஒருங்கிணைப்பின் மூலம் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் விவசாய அமைச்சருமான கே.டி. லால்காந்த தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ். அபயகோன்,போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் டாக்டர் பிரசன்ன குணசேன மற்றும் மக்கள் பிரதிநிதிகள், மத்திய மாகாண பிரதம செயலாளர் அஜித் பிரேமசிங்க,கண்டி மாநகர ஆணையாளர் இந்திக அபேசிங்க, வீதி அபிவிருத்தி அதிகாரசபை மத்திய மாகாண பணிப்பாளர் மகேந்திர விஜேபால உள்ளிட்ட அதிகாரிகள் குழு கலந்து கொண்டனர்.

