17.8 C
Scarborough

ஜாக் கிராலியிடம் ஷுப்மன் கில் போட்ட சண்டைதான் இங்கிலாந்தை உசுப்பிவிட்டது

Must read

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்ட முடிவில் ஜாக் கிராலி 2-வது ஓவரை இந்தியா வீசிவிடக்கூடாது என்பதற்காக தாமதப்படுத்திக் கொண்டிருந்தார், இதனால் கோபமடைந்த ஷுப்மன் கில் கிராலியுடன் சண்டையிட்டார், ஒட்டுமொத்த அணியும் கரகோஷம் செய்து கிராலியைக் கேலி செய்தது, இந்தச் சம்பவம்தான் இங்கிலாந்தை உசுப்பி விட்டது. இல்லையெனில் இந்தியா வென்றிருக்கலாம் என்று முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

எப்படி கோலி கேப்டன்சியில் கடந்த முறை லார்ட்ஸில் இங்கிலாந்து இந்திய டெய்ல் எண்டர்களுக்கு பவுன்சர்களாக வீசி வீசி கோலியைக் கடுப்பேற்றி தூண்டிவிட்டு டெஸ்ட் போட்டியை வெல்ல வைத்ததோ இந்த முறை ஷுப்மன் கில் தன் ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் களத்தில் சண்டையிட்டது பென் ஸ்டோக்ஸ் படையைத் தூண்டி விட்டுள்ளது என்பது சரியான பார்வைதான்.

3-ம் நாள் மாலை இந்திய அணிக்கு 2 ஓவர்கள் வீசலாம் போல்தான் இருந்தது. இங்கிலாந்து வர்ணனையாளர்களே நேரலை வர்ணனையில் ஜாக் கிராலியின் தந்திரத்தை கடுமையாக விமர்சனம் செய்தனர். ஓவர் தொடங்கும் முன்பே டிலேயிங் டேக்டிக்ஸ் செய்தார் கிராலி, அதனை வர்ணனையாளர்கள் குறிப்பாக இங்கிலாந்து வர்ணனையாளர்கள் கண்டித்து, ‘இந்நேரம் ஓவர் தொடங்கி 2 பந்துகள் வீசப்பட்டிருக்க வேண்டும்’ என்று கூறினார்கள்.

ஆகவே ஜாக் கிராலி கிரிக்கெட்டிங் ஸ்பிரிட்டுக்கு எதிராக தாமதம் செய்தார் என்பது உண்மைதான், ஆனால் ஷுப்மன் கில் அதைக் கொஞ்சம் நக்கல் நையாண்டியாக ஆட்டம் முடிந்து போகும் போது பேசியிருக்கலாம், களத்திலேயே அவரை மட்டப்படுத்தும் விதமாக கைதட்டி ஆரவாரம் செய்து கேலி செய்தது கொஞ்சம் டூ மச் ரியாக்‌ஷன் தான்.

ஆஸ்திரேலியாவில் இதே போல் சாம் கோன்ஸ்டாஸ் செய்ய அவரிடம் கடும் வாக்குவாதம் எழுந்து இதில் கவனம் சிதறி உஸ்மான் கவாஜா ஆட்டமிழந்தார். ஆனால் அன்று கிராலி அவுட் ஆகவில்லை, மாறாக இங்கிலாந்து அணி உணர்ச்சிக் கொந்தளிப்பில் மீண்டெழுந்து இந்திய அணியை தோற்கடித்து விட்டது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து முகமது கைஃப் தன் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: ஜாக் கிராலியுடனான இந்திய கேப்டன் ஷுப்மன் கில்லின் மோதல் இங்கிலாந்து அணியை உசுப்பி விட்டது. எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டிற்குப் பிறகே அவர்கள் பேட்டிங், பவுலிங், கேப்டன்சி மீது கேள்விகள் எழுந்தன. ஆனால் அன்று 3-ம் நாள் ஆட்ட முடிவில் ஷுப்மன் கில் படை செய்த கேலிச் செய்கையால் பென் ஸ்டோக்ஸ் உசுப்பப்பட்டார், அதனால் அவர் உத்வேகமான வேகப்பந்து வீச்சை வீசினார். தொடர்ச்சியாக 14 ஓவர்களை வீசினார்.

ஆகவே ஷுப்மன் கில் தனக்கு ஒத்து வரும் அணுகுமுறையைக் கடைப்பிடித்தால் நல்லது. இந்தத் தோல்வி மூலம் ஷுப்மன் கில் கடினமான பாடமாக இதனை கற்றுக் கொள்வார்.” என்று கைஃப் பதிவிட்டுள்ளார். கைஃபின் இந்தப் பதிவுக்கு நெட்டிசன்கள் உடன்பாடாகவும் எதிர்மறையாகவும் பதிலளித்துள்ளனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article